Shadow

மிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும்

Mister Chandramouli

‘நவரச நாயகன்’ கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”’நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ போன்ற வெற்றி படங்களைக் கொடுத்து, ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அவரது மகனான கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை ‘நான் சிகப்பு மனிதன்’ புகழ் திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது என எங்களது தயாரிப்பு நிறுவனம் ‘Creative Entertainers and Distributors’ சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் படம் இது. கெளதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குநர்கள் கார்த்திக் சாரை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் எனக் கூறி விட்டார் கார்த்திக் சார். ‘அனேகன்’ படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கிக் கலக்கிய கார்த்திக் சார் தற்பொழுது, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். தந்தை- மகன் பற்றிய ஒரு மிகவும் சுவாரசியமான கதையை இயக்குனர் திரு கார்த்திக் சாரிடம் சொன்ன பொழுது, அது அவருக்கு மிகவும் பிடித்துப் போக, இப்படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார். கார்த்திக் சார், கெளதம் கார்த்திக்கைத் தவிர இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா கசாண்ட்ரா, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், சதிஷ், ஜெகன், ‘மைம்’ கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு ரிச்சார்ட் M.நாதன் ஒளிப்பதிப்பு செய்யவுள்ளார், சாம் C.S இசையமைக்கவுள்ளார், T.S. சுரேஷ் படத்தொகுப்பு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்கம் செய்யவுள்ளார். ஜெயலக்ஷ்மியின் ஆடை வடிவமைப்பில், ‘பில்லா’ ஜெகனின் சண்டை இயக்கத்தில், ஜோசப் ஜாக்சனின் டிசைன்களில் இப்படம் உருவாகவுள்ளது.

ஒரே ஷெட்டியூலில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் கார்த்திக் சாரும், கெளதம் கார்த்திக்கும் அவரது தேதிகளை மொத்தமாக தந்துள்ளனர். நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள படப்பிடிப்பு இடைவிடாமல் சென்னை, புதுச்சேரி மற்றும் பல இடங்களில் நடக்கவுள்ளது.

நல்ல சினிமாவை என்றுமே கொண்டாடி, வெற்றி பெறச் செய்துள்ள தமிழ் சினிமா ரசிகர்கள், எங்களது இந்தப் படத்தையும் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இப்படத்தின் கதை அவ்வளவு சுவாரசியமானது.

இப்படத்தை, ‘BOFTA Media Works India Pvt Ltd’ சார்பில் எங்களது ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கும். எங்களது இந்தப் புதிய நிறுவனம் சினிமா, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவுள்ளது” எனக் கூறினார்.