ஹிந்தியில் தான் ‘ஜூலி 2’. தமிழ் டப்பிங்கில், இயக்குநரின் பெயரோடு சேர்ந்தே தலைப்பிடப்பட்டுள்ளது.
ஜூலி என்ற நடிகையின் அகச் சிக்கல்களைப் பேசுவதுதான் படத்தின் கதையாக இருந்திருக்க வேண்டும்.
ராய் லக்ஷ்மியின் பாலிவுட் அறிமுகம் மிக எரோடிக்காக (Erotic) அமைந்துள்ளது. படத்தில் கதை என்ற ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்ற போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத திரைக்கதை, ராய் லக்ஷ்மியின் உடலையே மொய்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்கான துகிலுரிப்பாக இல்லாமல், துகிலுரிப்பிற்காகவே இப்படமென்ற இயக்குநர் தீபக் ஷிவ்தசானியின் தெளிவு திடுக்கிட வைக்கிறது. தனது தெளிவிற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற ரீதியில் மட்டும் அவரைப் பாராட்டலாம்.
நல்ல நடிகையாக எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் இருக்க முயன்று, அதிலிருந்து வழுவி, தொப்புத் தொப்பென்று பிராவை நழுவ விட்டு, தன் உடலை மூலதனமாக்கி பிரபல நடிகை ஆகி விடுகிறார் ஜூலி. புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நாயகன், அண்டர்-கிரெளவுண்ட் தாதா, பிரபல கிரிக்கெட் வீரர் எனச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சல்லாபித்து, ஒரு நன்னாளில் தன்னிடம் ஏன் யாரும் உண்மையான காதலுடன் பழகுவதில்லை என வாழ்க்கையே வெறுத்து விடுகிறார். ஐய்யோ பாவம் என்றாகி விடுகிறது ஜூலியின் நிலைமை. ஆனால், பார்வையாளர்கள் யாரும் கண்ணில் ஜலம் வச்சுக்காமல் சிரிப்பது ஏனென்று தான் தெரியவில்லை.
‘உண்மையான காதலுக்கா பஞ்சம்? நீ ஜீசஸ் மேல் அன்பாக இருந்தால், அவர் உன் மேல் அன்பாக இருப்பார்’ என ஆனி ஆன்ட்டி ஆறுதல் சொல்கிறார். ‘சாமி சத்தியமாவா?’ எனக் கேட்கிறார் ஜூலி. ‘ஆமாம்’ என்கிறார் ஆனி ஆன்ட்டி. அந்நொடி முதல் பரிசுத்தமான ஜீவனாகப் பரிணமிக்கிறார் ஜூலி. நல்லவர்களைச் சோதிப்பது தானே பரமபிதாவின் வேலை?
ஜூலியை யாரோ சராமரியாகச் சுட்டுக் கொல்ல முனைகின்றனர். இப்போ படம் த்ரில்லர் மோட்-க்கு வந்து விட்டதா? சந்தேகம் வேண்டாம். வந்துவிட்டது எனக் கூட்டாக நம்புவோமாக! நம்பிக்கை தானே வாழ்க்கை. திருந்திய ஜூலியை யார் ஏன் எதற்குக் கொல்ல நினைக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.
கள்ளம் கபடமில்லாப் (உடைகளிலும்) பரிசுத்த ஜூலியாக ராய் லக்ஷ்மியும், ஆனி ஆன்ட்டியாக ரதி அக்னிஹோத்ரியும், காவல்துறை அதிகாரியாக சி.ஐ.டி. தொடர் புகழ் ஆதித்யா ஸ்ரீவஸ்தாவும், பிரபல தென்னிந்திய நடிகராக ரவி கிஷனும், அயல்நாட்டு அண்டர்-கிரெளவுண்ட் தாதாவாக சுறா படத்து வில்லன் தேவ் கில்லும் நடித்துள்ளனர்.
ராய் லக்ஷ்மி மீதுள்ள அபாரமான நம்பிக்கையில் லாஜிக்கைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் மிக மெத்தனமாகத் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் தீபக் ஷிவ்தசானி. அதற்கேற்றாற்போல் ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி, ராய் லக்ஷ்மியை நன்றாகச் சுற்றிக் காண்பிக்கிறார்.
சினிமா உலகின் கோரப் பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாகவும், அப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு நடிகையின் உண்மைக் கதை தான் என்றும் தயாரிப்புத் தரப்புப் படத்தைப் பற்றி விளம்பரப்படுத்தி இருந்தனர். எல்லாம் சரிங்கஜி, உண்மையைக் கண் கொண்டு பார்க்கிறப்படி சொல்ல வேண்டாமா?