காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் ‘துளசி தளம்’ எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்).
சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை.
படத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொடங்கி, படம் நகைச்சுவை மோட்க்கு மாறுகிறது. விவேக் தன் குடும்பத்தினரோடு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தேவைக்கு அதிகமாகவே விலாவாரியாகச் சொல்கின்றனர். வயிற்றைப் பதம் பார்க்கும் நகைச்சுவையாக இல்லாமல், படத்தின் நீளத்திற்கு உதவி செய்பவையாக மட்டுமே இருக்கின்றன. மாளிகையில் மாட்டிக் கொண்டு, காஷ்மோரா சக ஆட்டக்காரரைப் பாராட்டும் இடத்தில் மட்டும் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது.
இரண்டாம் பாதியில் படம் சீரியஸ் மோடை அடைகிறது. ராஜ்நாயக் வசிகரிக்கிறார். படம் நெடுகேயும் உடை வடிவமைப்பாளர்களான நிக்கார் தவான் மற்றும் பெருமாள் செல்வம் இருவரின் பங்கும் மிக அற்புதமாய் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதே போல், கலை இயக்குநர் ராஜீவனின் உழைப்பும் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. ‘தமிழில் எப்போ இப்படிலாம் போர்க்களக் காட்சிகள் கொண்ட படம் வரும்?’ என்ற குறையினைப் படம் போக்கியுள்ளது. மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குநர் கோகுல்.
ஏமாற்றுக்காரப் பேயோட்டி, சபிக்கப்பட்ட ஸ்த்ரீலோலன் என பிரதான கதாபாத்திரங்கள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், எந்தப் பாத்திரத்தோடும் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாதவாறு அந்நியமாகவும் மேலோட்டமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. காஷ்மோரா தப்பிக்க வேண்டுமென்ற பதைபதைப்போ, ராஜ்நாயக் விமோசனம் அடைந்து விடக் கூடாதென்ற கவலையோ எழவில்லை. எப்படியும் நாயகன் ஜெயித்து விடுவான் என திரைக்கதையோடு லயிக்காமல் ‘தேமோ’வெனப் பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பார்வையாளர்களுக்கு எந்த உணர்வும் கடத்தப்படவில்லையெனினும், படத்தின் மேக்கிங் தரும் பிரமிப்பு மட்டுமே காஷ்மோராவைக் காப்பாற்றுகிறது.
ரத்னமகாதேவியாக நயன்தாரா. ராஜ்நாயக்கிற்கு சாபம் அளிக்கும் காட்சியில் மட்டுமே கவர்கிறார். மற்ற காட்சிகளில், தனக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லாதது போல் ஃப்ரேமில் ஒடுங்கி நிற்கிறார். நயன்தாராவின் அத்தியாயத்தை அருந்ததீ படத்தின் டைலூட்டட் வெர்ஷன் எனச் சொல்லலாம். இத்தகைய ஜானர் படத்தில், இயக்குநர் ராஜ்மெளலி கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் அழகான கண்ணி ஒன்றை அனைத்துக் கதாபாத்திரங்கள் மீதும் இழைய விட்டிருப்பார். அதே போல், இந்தப் படம் எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவில்லை. ஒருத்தன் பொம்பளைப் பொறுக்கி, இன்னொருவன் ஊரை ஏமாற்றும் ஃப்ராடு. இங்கேயே படம் ஒட்டாமல் அந்நியமாகி விடுகிறது. மக்களை ஏமாற்றும் தன் சாதுரியத்தைக் கொண்டு ராஜ்நாயக்கையும் சமாளிப்பாரெனப் பார்த்தால், நயன்தாரா தான் கடைசி வரை ராஜ்நாயக்கிற்கு முட்டுக் கொடுக்கிறார். ஃபேண்டஸி படங்களின் முதுகெலும்பாக நாயகனின் துணிச்சலும் சாகசமும் இருக்கவேண்டும். ஆனாலும், படத்தில் ஒரு புத்திசாலித்தனமான காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். ‘நான் தான் ரத்னமகாதேவி’ என ராஜ்நாயக் முன் காஷ்மோரா வாள் சுற்றுமிடம் அருமை.
அமைச்சராக வரும் சரத் லோகிதஸ்வா, பழைய சாமியாரைத் துரத்தி விட்டு காஷ்மோரா பக்கத்தில் குனிந்து கொண்டு நிற்பார். இது அனைத்தும் ஒரு ஃபோட்டோ ஃப்ரேம்க்குள் நடப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பது அருமை. மாவீரனான ராஜ்நாயக்கை விட ஏனோ சபிக்கப்பட்ட ராஜ்நாயக் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார். கொடியைப் பறக்க விட்ட சந்தோஷ நாராயணன் காஷ்மோராவில் சோபிக்கவில்லை. உடம்பில் இருந்து தலையைப் பிரித்துக் கொண்டு அடியாட்களைப் பந்தாடும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தின் பலம். கோகுல் – ஓம் பிரகாஷ் இணை, தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட டெக்னிக்கல் பாய்ச்சலுக்குத் தயாரெனப் பறைசாற்றியுள்ளனர்.