நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி.
43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான ஜாக் க்வான்ட்டா என்பதில் நிச்சயமற்று இருக்கிறார் ப்ரிட்ஜெட்.
மூன்று படங்களுமே ப்ரிட்ஜெட்க்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றியதே! 1995இல் எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் எழுதிய நாவலான “ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் டைரி”யை அடிப்படையாகக் கொண்டு, 2001 இல் முதல் பாகம் வந்தது. 1999இல் எழுதப்பட்ட ‘ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்: எட்ஜ் ஆஃப் ரீசன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு 2004இல் இரண்டாம் பாகம் வந்தது. 12 வருடங்களுக்குப் பின் வந்திருக்கும் இந்த மூன்றாம் பாகத்திற்கு, அந்தக் கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் ஹெலன் ஃபீல்டிங். இவருடன் இணைந்து டேன் மேசரும், எம்மா தாம்ப்சனும் திரைக்கதையில் பங்காற்றியுள்ளனர். அடுத்த பாகத்திற்கான விதையையும் இறுதிக் காட்சியில் தூவியுள்ளது எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
தம்பதி சமேதராய்ப் போக வேண்டிய கர்ப்ப கால ஆய்வு வகுப்புகளுக்கு, ஜாக்குடனும் மார்க்குடனும் போகிறார் ப்ரிட்ஜெட். அங்கிருக்கும் பயிற்சியாளரோ, மார்க்கையும் ஜாக்கையும் ஓரினச் சேர்க்கையாளராகவும், ப்ரிட்ஜெட்டை வாடகைத் தாயாகவும் கருதிக் கொள்கிறார். படம் நெடுகேவும், இப்படிப் புன்னகையை வர வைக்கும் காட்சிகள் உள்ளன.
‘கிங்ஸ்மேன் (Kingsman: The secret service)’ படத்தில், கையிலொரு குடையுடன் செம ஸ்டைலிஷாகக் கலக்கிய கொலின் ஃபிர்த், இந்தப் படத்தில் தந்தையாகப் போகும் பரவசத்தையும், ஜாக்கைப் போட்டியாக நினைத்து மறுகுவதையும் முகத்தில் தேக்கி, மார்க் டார்சி பாத்திரத்திலும் அசத்தியுள்ளார். எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் ஜாலியான பணக்காரர் ஜாக் க்வான்ட்டாக பேட்ரிக் டெம்ப்சி நடித்துள்ளார். ப்ரிட்ஜெட் ஜோன்ஸாக ரெனே ஸெல்வெகர், 2001 இல் தோன்றி 15 வருடங்கள் நிறைவடைகிறது. இன்னமும் இந்தச் சீரிஸின் பிரதான பாத்திரமாக நடித்து, முழுப் படத்தையும் தன் வசம் வைத்துள்ள சாமர்த்தியசாலியாக உள்ளார். அதற்கு முழுமுதல் காரணம் திரைக்கதை என்றே சொல்லவேண்டும்.
தனி நபர் ஈகோவை விட பாதுகாப்பாக குழந்தை பிறப்பதே முக்கியமென்ற மனநிலைக்குக் கதாப்பாத்திரங்களையும் பார்வையாளர்களையும் தயார்ப்படுத்துகின்றனர். குடும்ப அமைப்பின் மீதான பிணைப்பையும் விட்டுத் தரவில்லை திரைக்கதை. டான் மேசரைத் தவிர்த்து, மற்ற இரண்டு திரைக்கதையாசிரியரும் பெண்கள். படத்தை இயக்கிய ஷரோன் மக்வயரும் எழுத்தாளரின் தோழி. படத்தின் மென்மையான, அதே சமயம் நகைச்சுவையான போக்கிற்கு இதுவே காரணம். திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான எம்மா தாம்ப்சன் படத்தில் மருத்துவராகவும் நடித்து, படத்தின் கலகலப்பிற்கு உதவிச் செய்துள்ளார்.
குழந்தை பிறந்ததும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அழைக்கப்படுகின்றனர் மார்க்கும் ஜாக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளும் மனமுதிர்ச்சியை, நமது தினசரிகளில் வாடிக்கையாகிவிட்ட அச்சுறுத்தும் பெருந்திணையோடு ஒப்பிட்டு, ஏக்கம் கொள்ளச் செய்கிறது.