விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் முதல் படம் கதாநாயகன் ஆகும். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது. இது அவரைக் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்”என்று கூறினார்.
நடிகர் ஆனந்த் ராஜ், “இப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இனி இந்தியாவில் முதல் ஷேக் நான் தான். படத்தின் இயக்குநர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் முருகானந்தம், “விஷ்னு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. என்னை இயக்குநர் மணிவண்ணனுடன் ஒப்பிட்டு சரண்யா பொன்வண்ணன் அவர்களும் மற்றவர்களும் பேசினார்கள். அவ்ளோ பெரிய இயக்குநருடன் ஒப்பிட்டுப் பேசியதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்” என்றார்.
நடிகர் விஷ்னு விஷால் பேசுகையில், “கிரிக்கெட் விளையாடினேன். அடிபட்டதால், எம்.பி.ஏ. படிக்கப் போனேன். 7 வருடம் சினிமாவில் வாய்ப்புத் தேடினேன். வேலைக்குப் போன, 21வது நாளில், ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திற்கான வாய்ப்புக் கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த போதிலும், அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களைத் தந்தன. எனினும் முயற்சியைக் கைவிடவில்லை. முண்டாசுப்பட்டிக்குப் பின் தொடர்ந்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப் பண்றோம் என்ற திருப்தி உள்ளது. இந்தப் படம் ஓடுது ஓடலை என்பதைத் தாண்டி, அத்தகைய திருப்தியை இப்பவே தந்துவிட்டது. வருடத்திற்கு ஒரு படம் தான் பண்ணணும் என்ற என் தீர்மானம், இயக்குநர் முருகானந்தத்துடன் பணி புரிந்ததால் மாறிவிட்டது” என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “கதையைக் கேளுங்க என விஷ்ணு விஷால் இயக்குநர் முருகானந்தத்திடம் அனுப்பி வைத்தார். மனிதர் கலகலவென மூன்று மணி நேரம் ஜாலியாகப்பேசினார். கதையை மட்டும் சொல்லவில்லை. அடுத்த நாள் நான் அழைத்து, ‘சார், சைன் பண்ணிட்டேன். கதை இன்னும் சொல்லலை’ என்றேன். ‘அதான் சைன் பண்ணிட்டீங்க இல்ல? இனி கதை தெரிஞ்சு என்னாகப் போகுது?’ எனக் கேட்டார். பின் வீட்டிற்கே வந்து 20 நிமிடங்களில் கதை சொன்னார். முருகானந்தத்திடம் ஒரு எனர்ஜி இருக்கு. அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு படத்தின் சென்ட்டர் ஹேப்பினெஸாக இருக்கணும். அது, கதாநாயகன் படத்தில் நிறையவே இருக்கு” என்றார்.