Shadow

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

Kaatu-paya-sir-intha-kaali-movie-review

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார்.

தமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசாலிங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்பியாக உள்ளது. மணி பெருமாளின் ஒளிப்பதிவு பாடல்களுக்குக் கூடுதல் அழகைக் கொண்டுவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் வாகனகங்களை மட்டும் ஒரு சைக்கோ எரித்து வருகிறான். டிப்பார்மென்ட்டில் சைக்கோ என்றழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் காளியிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. காவல்துறை சைக்கோவிடம் குற்றவாளி சைக்கோ எப்படிச் சிக்குகின்றான் என்பதுதான் படத்தின் கதை.

இன்ஸ்பெக்டர் காளிக்கு உதவ கான்ஸ்டபிள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற நபரை நியமிக்கிறார் கமிஷ்னர். அந்தப் பாத்திரத்தை மூணாறு ரமேஷ் சிறப்பாகச் செய்துள்ளார். கமிஷ்ணராக ஆடுகளம் நரேன் வரும் காட்சிகள் மட்டும் சிறிது ரசிக்கும்படி உள்ளது. சிவப்பு விளக்கு, சிவபானச் சித்தன், காம்ரேட் கிழவன் எனப் படம், கதையின் போக்கிற்குப் போகாமல் இயக்குநரின் விருப்பத்திற்கிணங்கப் பயணிக்கிறது. நாயகி ஐராவின் அறிமுகம், அவரது ஹாஸ்டல் காட்சிகள் எல்லாம் ‘ஐய்யோ அம்மா!!’ ரகமாகத் தெறிக்க விடுகிறது. அதுவும் க்ளைமேக்ஸில் நாயகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது செய்கை மாற்றம் எல்லாம் இயக்குநரின் கொலைவெறியில் தான் சேர்க்கணும்.

இன்ஸ்பெக்டர் காளியாக ஜெய்வந்த் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே! மிடுக்கான உடலுடன், ஷார்ப்பான கண்களுடன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் படத்தில், அவர் இன்ஸ்பெக்டராக, நாயகனாக என்ன செய்கிறாரென்று கடைசி வரை புரியவில்லை. தனது விருப்பத்திற்கிணங்க திரைக்கதையைக் கொண்டு சென்றுள்ள இயக்குநர், கதையைச் சுவாரசியப்படுத்த எந்த மெனக்கெடலும் செய்யவில்லை.