
தலைப்பிலேயே குறியீடாகக் கதையைச் சொல்லிவிடுகின்றனர். பூக்களாகத் தோன்றும் அரளி, பூக்கள் உதிர்ந்து விஷமாய் எஞ்சுகிறது. எத்தனை பேருக்கு இது புரியுமென்ற கவலையில், இயக்குநர் படத்தலைப்பின் பொருளை க்ளைமேக்ஸில் வசனமாகவும் வைத்துள்ளார். அவரது இந்தக் கவலை படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தே அப்பட்டமாய்த் தெரிகிறது. நேரடியாகக் கதைக்குள் சென்று, அது யாருக்கேனும் புரியாவிட்டால் என்ன செய்வதென அஞ்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இன்னாரென்று வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகிறார்.
நாயகிக்கு, மனிதர்களை விடப் பணமே பிரதானமாய் உள்ளது. அதற்காக அவர் எந்த எல்லைக்குப் போகிறார் என்றும், அதனால் எத்தகைய பாதிப்புகள் விளைகிறது என்பதும்தான் படத்தின் கதை.
உள்ளபடிக்குக் கதை இடைவேளையின் பொழுது தான் தொடங்குகிறது. அதற்கு முன்பான திரைக்கதை, கதைக்கு உதவாத பில்டப்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணேசன் எனும் பாத்திரத்திற்கு வேலை போகக் காரணமெனக் காட்டப்படும் காட்சி, கணினி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை மனனம் செய்து வேலை வாங்குவதாக வரும் காட்சி என முதற்பாதி பெரும்பாலும் ஒப்பேத்தல்கள்தான். கந்து வட்டிக் கடனை அடைப்பதற்கான முயற்சியாக, Deuce Bigalow (1999) என்ற ஹாலிவுட் படத்தின் நாயகன் வேலையைக் கணேசன் செய்கிறார். நகைச்சுவைக் காட்சிகள் எனக் கடந்துவிடலாம் என்றாலும், பருமனான பெண்ணின் உருவத்தைக் கேலி செய்வது போன்ற மலிவான சித்தரிப்பையாவது தவிர்த்திருக்கலாம். அந்த ஹாலிவுட் படத்தில் வருவது போல் கணேசன் அனைவருக்கும் உதவுவதாகவே கூடக் காட்டியிருக்கலாம். ஆனால், இயல்பாக நகைச்சுவை வராவிட்டால், அபத்த நகைச்சுவைகளை வலிந்து திணிக்காமலாவது தவிர்த்திருக்கலாம் இயக்குநர் A.R.சுப்புராஜ். படத்தொகுப்பாளர் விசாகன் சமரசமின்றி முதற்பாதியின் நீளத்தைக் கத்தரித்திருக்கவேண்டும்.
முதற்பாதிக்கு நேரெதிராய் உள்ளது இடைவேளைக்குப் பிறகான படத்தின் விறுவிறுப்பு. காப்பகம் நடத்தும் பெரியவர் மோகன்தாஸாக நடித்துள்ள அருணாச்சலத்தின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மிக அற்புதமாக உள்ளது. இவர் இயக்குநரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது (மகனுக்காகத் தந்தை எடுத்தது மணியார் குடும்பம் என்றால், தந்தைக்காக மகன் எடுத்தது அரளி எனச் சொல்லலாம். இரண்டு படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது அழகான முரண்). ஆடல், பாடல், காதலுடன் நாயகனாய் முதற்பாதியில் அறிமுகமாகும் மதுசூதனைக் காட்டிலும், கணேசனாக நடித்துள்ள இயக்குநர் சுப்புராஜ்க்குத்தான் காட்சிகள் அதிகம். தனது தந்தையைப் போல் அசரடிக்கும் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் இல்லாவிட்டாலும், அவர் தனது நடிப்பால் திரையில் தோன்றும்பொழுதெல்லாம் பார்வையாளர்களைக் கலகலப்பாக்கி விடுகிறார்.
இது, நாயகியைப் பிரதானப்படுத்தும் படமென்று கூடச் சொல்லலாம். தமிழ் சினிமாவின் மற்றொரு லூசு நாயகி எனப் பார்வையாளர்கள் தீர்மானித்திற்கு வந்துவிட்ட பிறகு, இடைவேளையினின்று நாயகி கதாபாத்திரம் அசுரப் பாய்ச்சல் பெறுகிறது. இத்தகைய கதாபாத்திரத்தில் சுணக்கம் காட்டாமல் நடித்துள்ள மஞ்சுளா ரத்தோடைப் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இந்தப் படத்தில் ஆட்டோ ஓட்டும் பெரியவர் கதாபாத்திரம் ஒன்றுண்டு. அப்பெரியவரும், அவரது மனைவியும், பார்வைக்கு மிகக் கண்ணியமாகக் காட்சியளிக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில், குழந்தைகளைக் கடத்தும் கும்பலாய் அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். முக்கியமாக அந்தப் பெரியவரின் சலனமற்ற கொடூரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதே போல், ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கும் இளைஞனின் வழக்கை விசாரிக்கும் பெண் காவல்துறை அதிகாரியும், பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரங்கள் கூட ரசிக்க வைக்கின்றன.
‘ரெவஞ்ச் த்ரில்லர்’ வகைமையைச் சேர்ந்த படமாக இருந்தாலும் சுபமாய் முடிவது ஆறுதலை அளிக்கிறது. நகைச்சுவையில்லா முழு நீள த்ரில்லர் படமாகச் சுப்புராஜ் எடுத்திருந்தால், மிகச் சிறப்பானதொரு படமாய் அமைந்திருக்கும். அதற்குப் படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பே சான்று!