தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும்.
அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் இதுவரை வெளியான கன்னட படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது. அதனுடைய பட்ஜெட் சுமார் 45 கோடி ஆகும். டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள கே.ஜி.எஃப் அந்தச் சாதனையை முறியடிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90 கோடியாகும்.
எப்படிப் பாலிவுட்டில், 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ திரைப்படம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே சுரங்கத் தொழில்சாலைகள் மெல்ல வளர்ந்து அரசியல் கட்சிகளையும் வளர்த்து, அரசியல்வாதிகளையும் வளர்த்து, குண்டர் படையினரையும் வளர்த்தெடுத்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியதோ; அப்படி, இந்தத் திரைப்படமும் 1951 இல் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலாரில் தங்கம் இருப்பதை அறிந்து அங்கே தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டு, கோலார் பகுதியே வளம் பெற்றதையும், அதைத் தொடர்ந்து அங்கே நடைபெற்ற அரசியல் கொலைகள், ரெளடியிஸத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகனான யாஷ், “இது பார்டரில் நடப்பதால் தமிழ் மக்களும் நெருக்கமாக உணர்வார்கள். ஆனால், அதையெல்லாம் விட, நல்லசினிமாவாக இருந்தால், அதை எடுத்தது கன்னடரோ, தெலுங்கரோ என்றெல்லாம் ரசிகர்கள் பாகுபாடு காட்டமாட்டார்கள். ரசிகர்களுக்குப் படம் நன்றாக இருந்தால் போதும். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.
மும்பையில் வளரும் நாயகன் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களைக் காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போராட்டமான குழந்தைப் பருவத்தைக் கொண்ட நாயகன், அதில் பெற்ற அனுபவங்களையும், தன் அம்மா சொன்ன சொல்லிக் கொடுத்ததை மனதிலேற்றியும் எப்படி எதிரிகளை வெல்கிறார் என்பதுதான் படத்தின் முடிவு.
கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநரான பிரஷாந்த் நீல், 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘உக்ரம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதினையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘கே.ஜி.எஃப்.’ இவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.
இந்தப் படத்தை, நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தமிழில் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், “இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறேன்” என்றார்.