LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை.
ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் கைப்பட்டால் சிறந்த குணசித்திர நடிகராகவும் மிளிர வாய்ப்புள்ளது. அதனால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவரை அணுகிய ஆர்ஜே பாலாஜி, தோற்ற அரசியல்வாதி பாத்திரத்தில் அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத்தை நடிக்கவைத்துவிட்டார்.
போஜப்பனாக நடித்திருக்கும் ராம்குமாருக்கு இது மூன்றாவது படம். அரசியல்வாதி வேடம் அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது. லால்குடி தொகுதியைத் தனது கோட்டையாக உருமாற்றி வைத்திருக்கும் ராம்ராஜ் பாண்டியனாக ஜே.கே.ரித்தீஷ். பாதி படத்திற்கு மேல் தான் அறிமுகம் ஆகிறார் என்றாலும் மாஸ் பாண்டியனாக இன்ட்ரோ கொடுத்து, காமெடி ராம்ராஜனாகச் சுருக்கிவிடுகின்றனர். ‘கள்ள ஓட்டுப் போடத் தெரியும்’ என்று ஆர்ஜே பாலாஜியின் வசனத்தை, கள்ள ஓட்டைத் தடுக்கத் தெரியும் என மாற்றிக் கொண்டதைத் தவிர்த்து, தன் இமேஜைப் பொருட்படுத்தாமல் இறங்கி நடித்துள்ளார் ரித்தீஷ். அதற்காக, மனோபாலா வரும் அந்தக் காமெடிக் காட்சியை வைத்திருப்பதெல்லாம் கொஞ்சம் டூ மச் தான்.
சாரா எம் சாமி எனும் சரளா முனுசாமியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரத்தைப் படைத்து தான் காமெடியன் இல்லை என நிரூபித்தள்ளார் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்ஜே பாலாஜி. சம கால அரசியலை நையாண்டி செய்திருந்தாலும், படம் சீரியசாகவே பயணிக்கிறது. LKG-ஐப் போலவே, தனக்கான கனவைத் தானே வடிவமைத்துக் கொண்டுள்ள ஆர்ஜே பாலாஜி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.