Shadow

“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ”இந்தப் படத்தைத் தொடங்கும் போது, இது போன்ற ஒரு கதை, இது போன்றதொரு மக்கள், இது போன்றதொரு வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு, இன்னல்கள் சவால்கள் என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தைத் தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை, சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தைக் கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படித்தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்தப் படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் புரியாமல் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதேபோல் நாங்களும் மாறிவிட்டோம். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தங்கலான் குடும்பமும் கஷ்டப்பட்டோம். அனைத்திற்கும் இறுதியாகத் தங்கத்தை கண்டுபிடித்தோம். அதுதான் இந்த படத்தின் வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ரஞ்சித் என்னைச் சந்தித்து கதையைச் சொல்லும்போது ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் எனச் சொன்னார். முதலில் தலையில் கொஞ்சம் முடியை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். அதன் பிறகு பாதி மொட்டை அடிக்க வேண்டும் என்றார். பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் கோவணம் கட்ட வேண்டும் என்றார்.

முன்னணி நட்சத்திர நடிகர்கள் யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிறைய யோசிப்பார்கள். இதைக் கேட்டதும் முதலில் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மற்றொருபுறம் எனக்குள் ஒரு பயமும் இருந்தது. மறுபுறம் இதனை மட்டும் சரியாகச் செய்து விட்டால்எப்படி இருக்கும் என்ற ஒரு பிரமிப்பும் இருந்தது. ஆனால் இதனை ரஞ்சித் கேட்டதால் ஒப்புக்கொண்டேன். அவர் கேட்டால் நான் ஆதாமாகவும் நடிக்கத் தயார். சில இயக்குநர்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பிப் பணியாற்றலாம். என்னை உருவாக்கியது இயக்குநர்கள் தான்.

படப்பிடிப்புத் தளத்தில் முதல் நாள் மட்டும் கோவணம் கட்டிக் கொண்டு நடிக்கும் போது சிறிது கூச்சம் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்தக் கதாபாத்திரமாக மாற மாற அந்த மக்களின் வாழ்வியலுக்குள் சென்று விட்டோம். இந்த மேஜிக்கை நிகழ்த்தியது ரஞ்சித் தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ரஞ்சித் இல்லை என்றால் நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கவே முடியாது. இது போன்றதொரு சவாலான வேடத்தை வழங்கியதற்காகவே ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விநியோகஸ்தர் சக்திவேலன் சொன்னது போல் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படங்களில் நடித்து விடலாம். ஆனால் இது போன்ற பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரத்தில், அதையும் ஜனரஞ்சகமாக உருவாக்கி மக்களிடத்தில் சென்றடையச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.

எனக்கும் இயக்குநர்களுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும். பாலா சார், ஷங்கர் சார், மணி சார், ஹரி, தரணிஎன அனைத்து இயக்குநர்களிடமும் சினிமா கடந்த ஒரு நட்பு இப்போது வரை தொடர்கிறது. மெட்ராஸ் படத்திலிருந்து ரஞ்சித் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது அது இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது. அவர் எனக்கு தங்கலானை கொடுத்ததற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதற்கு முன் பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். ஆனால் தங்கலான் படத்தில் ஒரு உண்மை இருந்தது. ரஞ்சித்தின் ஆழ்ந்த சிந்தனை அதில் வெளிப்பட்டது. இது சாதாரண படம் அல்ல. இந்தப் படத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும் அனைவரையும் ரஞ்சித் சிந்திக்க வைத்திருக்கிறார்..

அடுத்ததாகத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இது போன்றதொரு படத்தைத் தயாரிப்பதற்குத் துணிச்சல் வேண்டும். அதற்காக அவருக்கும், இந்த மேடைக்கு வருகை தந்திருக்கும் நேகா ஞானவேல் ராஜாவுக்கும் நன்றி.

கதாசிரியர் அழகிய பெரியவன், எழுத்தாளர் தமிழ் பிரபா, கவிஞர் மௌனம் யாத்ரிகா, பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்கள், என்னுடைய உதவியாளர்கள், படத்தினை விளம்பரப்படுத்தும் போது உடன் வருகை தந்து பணியாற்றிய குழுவினர் என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு படத்தில் நடிக்கச் சம்மதித்து விட்டால், அந்தப் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் சென்றுவிடும். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னிடம் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ரசிகர்களுக்காக ஒரே சமயத்தில் ‘மகான்’ , ‘கோப்ரா’ , ‘பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எல்லாப் படத்திலும் அதே கெட்டப், அதே ஹேர் ஸ்டைல். ஆனால் அதில் எனக்கு என்ன சவால் இருந்தது என்றால், ஒரே கெட்டப்பில் மூன்று படங்களிலும் வெவ்வேறாக நடிக்க வேண்டும். இந்த சவால் எனக்கு மிகவும் பிடித்த விசயமாக இருந்தது.

சில படங்கள் சில நேரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது இல்லை. அது ஏன் என்பது நமக்கு தெரிவதில்லை. ஆனால் அந்தப் படங்களில் இடம்பெறும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருந்தேன். அந்தப் படம் வெற்றி பெறாததால் மக்களைச் சென்றடையவில்லை. அதனால் இந்தப் படம் வெற்றியைப் பெற்ற போது அதற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை ரசிகர்கள் உணர்கிறார்கள், பாராட்டுகிறார்கள் எனும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.