ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இயக்குநர் பா. ரஞ்சித், “திரைப்படங்கள் ஏன் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் திரையுலகில் நுழைந்தேன். இந்தக் கேள்வியுடன் தான் என்னுடைய திரைப் பயணம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது.
இந்தப் பயணத்தில் உருவான தங்கலான் முக்கியமான விவாதத்தையும், முக்கியமான வெற்றியையும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அளித்த அனைவருக்கும் நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ, அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது. மக்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கடத்த வேண்டும். எனக்குள் இருக்கும் அகத்தை இந்தப் படைப்பிற்குள் வெளிப்படுத்த வேண்டும். நான் மக்களிடம் பேச வேண்டும் என்று நினைத்த விசயத்தை இதில் சொல்லி இருக்கிறேன். இதனை என் அளவில் சரியாகப் புரிந்து கொண்டு அதைக் கொண்டாடி வரும் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. இந்தப் படத்தைப் பற்றி ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு நாம் சரியான படடைப்பைத்தான் வழங்கி இருக்கிறோம் என்ற மிகப் பெரிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
என்னுடைய இந்த வெற்றியில் பலர் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய கடின உழைப்பு தான் காரணம். நான் உழைப்பதற்கு என்றுமே அசராதவன். நான் உழைப்பது, கடினமாக உழைப்பது என்பது பெரிய விசயமல்ல. ஆனால் என்னைப் போலவே அத்தனை பேரும் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணத்தில் என்னுடைய சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது தீரா அன்பும், காதலும் கொண்டு இந்தப் படத்திற்காகப் பணியாற்றிய அனைவருக்கும் இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் என் மீது காட்டிய அன்பும் காதலும் எனக்குக் கூடுதலான பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் உருவாக்கியிருக்கிறது.
இவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்கச் செய்கிறது. சில தருணங்களில் சிலரிடமிருந்து வன்மம் எழத்தான் செய்யும். அவ்வன்மத்திற்கு பதில் அளித்தால் நாம் அங்கேயே தேங்கி விடுவோம். அதனால் அதைவிட அதிகமாக அன்பு காட்டும் ரசிகர்களுக்காக என் பாதையில் செல்லத் தீர்மானித்திருக்கிறேன்.
ஒரு படைப்பாளிக்கு, ஒரு திரைப்பட இயக்குநருக்கு, ஏன் இவ்வளவு பேரன்பும் காதலும் என எனக்குப் புரியவில்லை? என்னை ஏன் இவர்கள் இவ்வளவு கொண்டாடுகிறார்கள்? தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஆந்திராவில் இருந்தும் எனக்கு ஏன் ஆதரவு தருகிறார்கள்? இன்னும் படமே வெளியாகாத மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்தும் என்னை ஏன் கொண்டாடுகிறார்கள்?
இதற்கு ஒரே பதில், படைப்புகளின் மூலமாக நான் பேசும் கருத்துகள் தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. கவனிக்கப்படுகிறது. மேலும் அதில் உள்ள கலைத்திறன்கள் தான் கவனிக்க வைக்கின்றன. நாம் செய்யும் வேலையில் தனித்துவம் இல்லை என்றால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நான் என் படங்களில் பேசும் கருத்து, இடம்பெற செய்திருக்கும் சிந்தனை, மக்களுடன் மக்களுக்காகப் பகிர்ந்து கொள்ளும் அன்பு, இதனைச் சரியாகப் புரிந்து கொண்ட பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான் தங்கலான் படத்திற்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. மேலும் இது எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.
இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர் அழகிய பெரியவனுடன் பெரிய விவாதம் நடைபெற்றது. அவர் குறிப்பிடும் சில விசயங்கள் உணர்வுபூர்வமானவை . ஆனால் அதனைத் திரைக்கதையில் எப்படி அமைப்பது என்பது குறித்து நான் தனிப்பட்ட முறையில் சிந்தித்தேன். அது தொடர்பான பயணம் என்னுள் நீடித்தது. அது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பயணம். அதிலிருந்து தான் அனைத்தும் இயங்குகிறது என நான் நினைக்கிறேன்.
இந்த விசயத்தில் என் அலைவரிசையை சரியாகப் புரிந்து கொண்டு தமிழ் பிரபாவும் பணியாற்றினார். அழகிய பெரியவன் எழுதிய வசனங்களை அவர் தனக்கே உரித்தான வட்டார வழக்கு மொழியில் எழுதினார். அவருடைய இந்த நுட்பமான பணி தான், அதாவது கதாபாத்திரங்கள் பேசும் வசன உச்சரிப்பு தான் இந்தப் படத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக்கியது என நான் நினைக்கிறேன்.
இந்தத் திரைப்படம் காலத்தைக் கடந்து பொக்கிஷமாக இருக்கும். அதற்கான அனைத்து விசயங்களும் இதனுள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது மூவர். அதில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். அவருடைய உழைப்பு பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. படத்தின் அனைத்து விமர்சனங்களிலும் தவறாது ஜிவியின் பெயரும் இடம் பெற்றது. இந்தத் தருணத்தில் அவருக்கும், அவருடன் பணியாற்றிய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவது நபர் ஞானவேல் ராஜா. இவரை மட்டும் நான் சந்திக்காமல் இருந்தால் என்னுடைய திரைப்பயணம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். என் திரைப்பயணத்தை எளிதானதாகவும் இலகுவானதாகவும் மாற்றியது அவர் தான். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அட்டக்கத்தி படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அந்த நிறுவனத்தில் நான் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமானேன். அதில் ஒன்று ‘மெட்ராஸ்’. மற்றொன்று தான் ‘தங்கலான்’. இந்தப் படத்தைப் பெரிய அளவில் வெளியிடுவார் என்ற நம்பிக்கை அவர் மேல் எனக்கு இருந்தது. அதை இன்று சாத்தியமாக்கிக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கூட அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தயாராக இருங்கள். மிகப் பெரிய முன்னணி நட்சத்திரத்துடன் இணைந்து விரைவில் பிரம்மாண்டமான கமர்ஷியல் படம் ஒன்றில் பணியாற்றலாம். உங்களது கடின உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் உங்களுடைய ரசிகன்’ என நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு, இந்த அளவிற்குத் திரையரங்கத்திற்குள் ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்து இழுத்து வந்தவர், இந்தப் படத்தின் இன்றைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் விக்ரம் சார் மட்டும்தான்.
இதுவரை எனக்குப் புரியாத புதிராக இருப்பது இவர் ஏன் என்னை இவ்வளவு தூரம் நம்பினார் என்று!? இதுவே எனக்கு பயத்தையும் அளித்தது. எவ்வளவு இயக்குநர்கள், எவ்வளவு வெற்றிகள், எவ்வளவு கதாபாத்திரங்கள், எவ்வளவு ரசிகர்கள் கொண்டிருக்கும் இவர் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என நான் நினைத்திருக்கிறேன். அவர் ஏன் இது போன்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தார்? இதற்கான அவசியமும் தேவையையும் அவருக்கு என்னஎன்பது எனக்குப் புரியாமல், அவரிடமே நேரடியாகக் கேட்டேன்.
‘இத்தனை வெற்றிகளை ருசித்து இருக்கிறீர்கள். எது உங்களை இந்த அளவிற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று தூண்டுகிறது? ஏன் இது போன்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறீர்கள்? உங்களைப் போன்ற நட்சத்திர நடிகர்கள் தங்களுடைய சௌகரியமான எல்லையில் இருந்துதான் படத்தில் நடிப்பார்கள்.’
அதற்குப் பின் தான் புரிந்தது. அவர் தன்னுடைய ரசிகர்கள் மீதும், சினிமா மீதும் வைத்திருக்கும் மிகப்பெரிய காதல் தான் காரணம் எனப் புரிந்தது. அது, அவருடைய தீராத போராட்ட குணமாகத்தான் நான் பார்க்கிறேன். அதனால்தான் பல பரிணாமங்களை உடைய கதாபாத்திரங்களைத் தேடித் தேடி நடித்து வரும் வேட்கை உடைய நடிகராக இருக்கிறார். இவருடைய நடிப்பிற்குத் தீனி போடுவது என்பது பெரும் சவாலான விசயம். அவருடைய நடிப்பிற்கு தங்கலான் சரியான தீனியை வழங்கி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது போன்ற திறமை வாய்ந்த நடிகருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான விசயம். அவருடன் இணைந்து பணியாற்றியதை ஒரு அனுபவமாகவும் பாடமாகவும் நினைக்கிறேன். அவருடனான பயணம் எனக்கு நல்ல படங்களை உருவாக்குவதற்கு உதவும் என நம்புகிறேன். அவர் எனக்குச் செய்த பெரிய விசயத்தை அவருக்கு நான் எப்படி திருப்பிச் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” என்றார்.