Shadow

“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 Aம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் நிழல்கள் ரவி, “சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும், நடிகர் சந்தானமும் இணைந்து ‘ டிக்கிலோனா’ திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘படத்தில் நல்லதொரு கேரக்டரைக் கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெறச் செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலின் கேப்டனாக நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியைப் பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதைப் பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது. சந்தானம் அதை எளிதாகச் செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,” என்றார்.

நடிகை கஸ்தூரி, ”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காகப் பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பைப் பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன்.

நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள். இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம்.

உள்ளொன்று வைத்துப் புறம் பேசாத, மனதில் தோன்றியதைப் பட்டென்று பேசும் எஸ்.டி.ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப் பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்குச் சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள் சந்தோஷம் அடைவீர்கள்,” என்றார்.