மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. படத்தைச் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, “இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம். இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் ஒரு மொழி மாற்று திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் ஒரு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார் மதன் கார்க்கி.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ள மதன் கார்க்கி, இந்தப் படத்திற்குத் தற்காலிக தலைப்பாக ‘மலைக்கள்ளன்’ என்ற தலைப்பை வைக்க நினைத்ததாகக் கூறினார். இருப்பினும், இந்தத் தலைப்புக்கான உரிமையைப் படக்குழு முறைப்படி பெற்றால் தான் வைக்க முடியும் அல்லது வேறு ஒரு புதிய தலைப்பு வைக்கப்படும்.
நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ஒரு கூடுதல் ஈர்ப்பு ஆகும்.