Search

வயலின் ‘ஞான’ சேகரன் 80

1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர்.

Violinist-M.Chandrasekaran

70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார்.

கல்கத்தாவில் பிறந்த சந்திரசேகரன், மஞ்சள் காமாலையின் தாக்கத்தால், தன் இரண்டாவது வயதிலேயே தன் பார்வைத் திறனை இழந்து விடுகிறார். ஏழு வயதில் தந்தையையும் இழக்க, அவரைச் சென்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் அவரது தாயார் ஸ்ரீமதி சாருபாலா மோகன். மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு குருவாக இருந்து வயலின் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார். மூன்று வயதிலேயே பெரும்பாலான ராகங்களை அடையாளம் காணும் தன் மகனின் இசையார்வத்தைக் கணித்து, ‘இசை தான் அவனது வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வருகிறார். மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக, முதலில் அவர் ப்ரெய்லி மொழியைக் கற்றுக் கொண்டு மகனை அனைத்து விதங்களிலும் பயிற்றுவிக்கிறார். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளும், ஆங்கிலமும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. “எனக்காகவென்றே வாழ்ந்த அம்மாக்கு, நான் பெரிய ஆளாகவேண்டுமென ஆசை” என அவர் தனது அம்மாவை வாஞ்சையோடு நன்றி கூருகிறார். அவர் மட்டுமன்று, அவரது குடும்பமே ஸ்ரீமதி சாருபாலா மோகனை அவ்வாறே நினைவு கூருகின்றனர். பிறந்த நாள் விழாவில், M.சந்திரசேகரனைப் பேச வைத்து அழகாக உருவாக்கப்பட்டிருந்த அவரைப் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பினர். அவர் தன் வாழ்க்கைப் பாதையை நினைவு கூர்ந்து, சிறு குழந்தை போல் சிரிக்கும் காட்சி, ஆவணப்படத்தைப் பார்த்தவர் மனதில் சில நாட்களாவது அப்படியே உறைந்துவிடும்.

விழாவில் கலந்து கொண்ட பாடகர் T.N சேஷகோபாலன், “டாக்டர் M.சந்திரசேகரன் இசையைக் கேட்கிறவர்கள் இவருக்கு வயசு 18ஆ அல்லது 80ஆ எனச் சந்தேகப்படுவார்கள். கடவுள் அந்தளவுக்கு இவரை ஆசிர்வதித்துள்ளார். கச்சேரியில் வாசிக்கும் போது ‘இதுக்கு மேல இந்த ராகத்துல என்ன இருக்கு?’ அப்படிங்கிற மாதிரி வாசிப்பார்” எனப் புகழ்ந்தார். மியூசிக் அகாதெமியின் தலைவர் N.முரளி, “வாழ்க்கையை கொண்டாடக்கூடிய எளிமையானவர் டாக்டர். M.சந்திரசேகரன். அவருடைய கவனம், ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. இவருக்கு இவர் அம்மாதான் இன்ஸ்பிரேசன். தற்போது இவர் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். இவரிடம் பலர் இசையுடன் எளிய வாழ்வியலையும் கற்கின்றனர்” என்றார் மகிழ்ச்சியாக. M.சந்திரசேகரனின் பிரியத்துக்குரிய தருணங்கள் என்றால், அது அவரது சீடர்களுடன் பேசிக் கொண்டே செல்லும் ‘வாக்கிங்’ தான். அவரது சீடர்களில் ஒருவரான பரத் குமாரின் கச்சேரியோடு தான் விழாவே தொடங்கியது.

வயலின் மேதை M.சந்திரசேகரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சீடர்கள், ரசிகர்கள் சூழ, விழா மிகச் சிறப்பாக நடந்தது.

M.Chandrasekaran-80