Shadow

ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

arun-vijay-in-kovai

அருண் விஜய் தனக்கான அடையாளத்தைப் போராடி வென்றவர். தோல்விகளில் பாடம் கற்று, தொடர் வெற்றியைப் பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கைப் பாடம். சமீபமாக அவரைக் காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடித் தீர்த்தனர்.

இது குறித்து, “கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்குப் பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில்,  உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதது.

பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைத் தனித்தனியே குறிப்பிட்டுப் பேசியது பெரும் ஆச்சரியமாக இருந்தது. தயாரிப்புத் தரப்பான லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்குப் பெரும் நன்றிகள்.

என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையார்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார்.

அதை நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளது” என்றார் அருண் விஜய்.

ரசிகர்களைப் போலவே தானும், “மாஃபியா: அத்தியாயம் 2” படத்தின் அறிவிப்பிற்காக உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருப்பதாகக் கூறினார்.