‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் ‘தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்’, 1951 இல் ‘அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்’, 1984 இல் சோவியட் படமான ‘தி இன்விசிபிள் மேன்’, 2000இல் வெளிவந்த ‘ஹாலோ மேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, ‘தி இன்விசிபிள் மேன் (2020)’ படம் வ்ளியாகவுள்ளது.
பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர் செய்வதை உணர்கிறால் செசிலியா. அவளை மற்றவர்கள் நம்ப மறக்க, விபரீதம் முளை விடுகிறது.
யார் கண்ணிலும் படாத சைக்கோவிடம் இருந்து செசிலியா மீள்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் பதைபதைக்கும் கதை. இப்படத்தை லே வானல் (Leigh Whannell) இயக்கியுள்ளார். ஸ்டெஃபான் டுசியோ ஒளிப்பதிவு செய்ய, ஆண்டி கேன்னி படத்தொகுப்பு செய்துள்ளார். யுனிவர்சல் பிக்சர்ஸின் இப்படத்தை ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.