Shadow

துருவங்கள் பதினாறு விமர்சனம்

D16 vimarsanam

‘நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)’ என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார்.

பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை.

மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளும் திருப்பங்களும் இல்லாமல் ‘சப்’பென்று இருக்கும். லாஜிக் ஓட்டைகளும் உறுத்தும். ஆனால், கத்தி மேல் நடக்கும் லாவகத்தோடு நான்-லீனியராகத் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தியுள்ளார் கார்த்திக் நரேன்.

துருவம் என்பதற்கு ‘குணத்தில் எதிரெதிர் நிலை’ என வரும் பொருள் இப்படத்திற்குப் பொருந்தும். “படத்தில் மொத்தம் 16 கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின் மையக்கதை 16 மணி நேரத்தில் நிகழ்கிறது” எனச் சொல்லியுள்ளார் இயக்குநர். கொல்லப்பட்டு பூங்காவில் கிடப்பவனும், அவனது நண்பனும் ஒரே குணத்தைக் கொண்டவர்கள் என்றே வரையறுக்க முடியும். ரஹ்மானுடன் விசாரணையில் தன்னை இணைத்துக் கொள்ளும் கான்ஸ்டபிள் கெளதமும் கூட ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள் தான். உண்மையில், ரஹ்மானைத் தவிர எந்தப் பாத்திரமுமே மனதில் பதிவதில்லை. ரஹ்மானைத் தவிர்த்துக் திரையிலும் கதையிலும் முக்கியம் பெறும் கதாபாத்திரம் எனக் கொண்டால், அது கான்ஸ்டபிள் கெளதமாக நடித்திருக்கும் பிரகாஷ். முக்கியமாக படம் நெடுகேவும் தேடப்படும் கொலைக்காரன் யாரெனத் தெரிய வரும் பொழுது கூட, அப்பாத்திரம் மனதில் பதியாததோடு, எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. படத்தில் வரும் அத்தனை நடிகர்களும், தங்கள் பங்களிப்பை மிக அற்புதமாக அளித்துள்ளார்கள்.

என்ன நடக்கிறது, யார் செய்திருப்பார்கள் எனப் பார்வையாளனை யூகிக்கக் கூட அனுமதிக்காமல், ‘அடுத்து என்ன?’ என்ற ஆவலைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் தீபக்காக வரும் ரஹ்மானுக்கு இது அவரது வாழ்நாளின் சிறந்த கதாபாத்திரமாக அமையும். முன்பே, அமீரின் ராம் படத்தில் இப்படியொரு பாத்திரத்தினை அவர் ஏற்றிருந்தாலும், இப்படம் ரஹ்மானை மையப்படுத்தி முழுமையாய் வந்துள்ளது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.  சின்னச் சின்ன அசைவுகளில் இருந்து, வாய்ஸ் மாடுலேஷனின் ஏற்ற இறக்கம் வரை ரஹ்மான் பிரமாதப்படுத்தியுள்ளார். தானேற்ற கடைசி வழக்கை அசை போட்டவாறு படம் நெடுகே பேசிக் கொண்டேயிருக்கிறார். படம் ரஹ்மானின் வாய்ஸ்-ஓவரில் தொடங்கி அதிலேயே முடிகிறது. ரஹ்மானின் குரலோடு சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு போட்டி போட்டு விஷூவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளிக்கிறது.

விஷூவல் ட்ரீட் என்பது சரியான பதமில்லை. புதிரைத் தக்க வைக்கும் லைட்டிங்கும், DI கலரிங்கும் பார்வையாளனின் மனதோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது. விஷூவல் கேம் எனச் சொல்லலாம். இந்த கேமின் கீ-ப்ளேயர், DI கலரிங் செய்து படத்தைத் தொகுத்துள்ள எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் தான். எங்கும் சின்ன பிசிறு கூட இல்லாமல், கனக் கச்சிதமாக தன் வேலையைச் செய்துள்ளார். 105 நிமிடங்கள் தான் படத்தின் ஓட்ட நேரம் என்பதே அதற்கு சிறந்த உதாரணம். இவர்களோடு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயும் கலந்து கொள்ள படம் முழுவதுமே அதகளம் புரிந்துள்ளனர். மிகச் சிறப்பான பின்னணி இசை அதன் பலம். சட்டென முடியும் படம் தந்திருக்க வேண்டிய அதிருப்தியை, “காற்றில் ஒரு ராஜாளி” என்ற பாடலின் மூலம் நிறைவாய்ப் படத்தை முடித்து வைக்கிறார். 

2016-இனை நிறைவாக முடித்து வைத்து, புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.