மயூரன் என்றால் ‘உன்னைக் காப்பவன்’ அல்லது ‘வெற்றி புனைபவன்’ என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். இவர் பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ‘உன்னைக் காப்பவன்’ என்ற பொருளே படத்தின் தலைப்பிற்குப் பொருந்தும். அதனால் தா நாயகனுக்கு சேகு எனும் சே குவேரா என்று பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர்.
சிதம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நாயகனின் அறை தோழன் ஒருவன் காணாமல் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும், அவனைத் தேடும் நாயகனுக்கு என்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை.
மயூரனாகிய நாயகனால் தன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவே மிகவும் மெனக்கெடுகிறான். தனக்கு ஏதும் நிகழாமல் தன்னைத் தானே நாயகன் காப்பாற்றிக் கொள்வதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். மயூரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனாகச் சுருங்கிக் கொள்கிறான்.
படத்தின் கதைக்களம், பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. ஆனால் கதை அக்களத்தில் நிகழாமல், வழக்கமாகத் தமிழ் சினிமாவில் வரும் கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரியை விட்டும், படிப்பை விட்டும் வெளியேவே நிகழ்கிறது. விஜி எனும் டோக்லியாக நடித்திருக்கும் அமுதவாணன் நகைச்சுவைக்கு உதவவில்லை.
மாணவன் என்ற போர்வையில் வடநாட்டு ஜோஹியை விடுதியில் தங்க வைத்து, அவன் மூலம் போதைப் பொருள் தொழில் செய்கிறான் ஜான். ஜானாக நடித்துள்ளார் லென்ஸ் படப்புகழ் ஆனந்த்சாமி. எந்தக் கதாபாத்திரமும் எதார்த்தமாக இல்லாதது தான் படத்தின் குறை. எக்காரணமும் இல்லாமல் நாயகனுடன் முறைத்துக் கொண்டே இருக்கும் ஜோஹி, கண்டதுமே காதல் கொள்ளும் நாயகி, ஒரு லட்ச ரூபாய் பணத்திற்காக என்ன ஏது என்று தெரியாமல் போதைப் பொருளைக் கைமாற்ற ஒப்புக் கொள்ளும் கல்லூரி மாணவன் என கதாபாத்திரங்கள் அந்தரத்தில் ஆடுகிறார்கள்.
ஸ்வேதா எனும் பாத்திரத்தில் அஸ்மிதா நாயகியாக நடித்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் காதலிக்கிறேன் என வீட்டில் சொன்னதும், உடனே நிச்சயம் செய்து விடுகின்றனர். ‘படிப்பு முடியட்டும்ப்பா’ என்ற பேச்செல்லாம் இல்லை. நாயகனைப் பார்த்து, நாயகியின் தந்தை, ‘பார்க்க நல்ல குடும்பத்துப் பையனா இருக்க. வீட்டுல வரச் சொல்லுப்பா’ என்று எடுத்ததுமே பச்சைக் கொடிதான். நாயகனாக அஞ்சன் நடித்துள்ளார்.
பெரியவர் எனும் பாத்திரத்தில் உருட்டல் மிரட்டல் செய்யும் வேல ராமமூர்த்தி. மிக க்ளிஷேவான நடிகராக அவரை உருமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்திலும் அதுவே தொடர்கிறது. சந்தோஷ் சிவனின் உதவியாளரான பரமேஷ்வரின் ஒளிப்பதிவு, இரவுக் காட்சிகளையும் துல்லியமாய் ஃப்ரேமில் காட்டுகிறது. க்ளைமேக்ஸில் நாயகன், வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் எதிர்பாராத் தருணங்களைப் பற்றியும், பேசும் ஒரு வசனம் பிடித்துப் போய், அதற்காக ஒட்டு மொத்த படத்தையும் இயக்குநர் புனைந்திருப்பாரோ என ஐயம் எழுகிறது.