Shadow

சிக்சர் விமர்சனம்

sixer-movie-review

ஆதிக்கு மாலைக்கண் நோய் உள்ளது. மாலை ஆறு மணிக்குள் டானென வீட்டுக்குள் வந்துவிடுவார். இந்தக் குறையின் காரணமாக கல்யாணம் வேண்டாம் என மறுப்பவருக்குக் கிருத்திகாவைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நகைச்சுவைப் படத்தில் வில்லன்களின் பாடு தான் திண்டாட்டமாய் இருக்கும். ஆர்.என்.ஆர்.மனோகரும், ஏ.ஜே.வும் அப்படியான வில்லன்கள். செம பில்டப்களுடன் அறிமுகமாகும் வில்லன்கள், அதே வேகத்தில் காமெடியன்கள் ஆகுகிறார்கள். அதே போல், கலக்கப் போவது யாரு ராமருக்கும் ஒரு கொடூரமான பில்டப். அவரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஜி.வி.பிரகாஷுடன் குப்பத்துராஜா படத்தில் பல்லக் லல்வானி, கிருத்திகா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். நாயகனுடன் இரவில் இரண்டு, மூன்று வெளியில் சென்றும், அவரது குறையைக் கண்டுபிடிக்காத லூஸு ஹீரோயின் வேஷம் தான் வழக்கம் போல். அவரது தந்தையாக சூட்கேஸ் பரந்தாமனாக ராதாரவி நடித்துள்ளார். வழக்கம் போல் சதீஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார்.

ஆதியாக வைபவ் நடித்துள்ளார். இவ்வளவு பலவீனமான திரைக்கதையிலும், தனது இருப்பை ஆழமாய்த் தக்க வைத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்துகிறார். ஆனால், அந்தப் பொருத்தம் படத்திற்கு எந்த வகையிலும் உபயோகப்படாத அளவுக்குக் காட்சிகளால் ஒப்பேற்றியுள்ளார் இயக்குநர் சாச்சி.

நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கும் ஒன்-லைனைப் பிடித்து விட்டு, அதிலிருந்து கதையை உருவாக்க மெனக்கெடாமல், சீன்களாக மேம்போக்காகப் படத்தை நகர்த்தியுள்ளார். வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறவரிடம், குறைகளை மறைத்துக் கல்யாணம் வரை கொண்டு போய்விட்டால் போதுமென நினைப்பது என்பது பிற்போக்குத்தனத்தில் வரும். அதாவது பெண்ணின் கழுத்தில் தாலி மட்டும் ஏறிவிட்டால் போதும், பின் அந்தப் பெண்ணால் தாலி கட்டியவனை மறுக்கவே முடியாது என நினைக்கும் முட்டாள்த்தனத்தின் எச்சம்.

ஏமாற்றுவதைக் காதலென நியாயப்படுத்தும் இயக்குநர் சாச்சி, உண்மையாய் இருப்பதும், வெளிப்படையாக இருப்பதும் எந்த ஓர் உறவிலும் அடிப்படையான குணம் என்பதைக் கருத்தில் கொள்ளாதது வேதனையளிக்கும் சங்கதி. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது போல், படத்தின் ஒரே ஆறுதல், நாயகனுக்குப் படிப்பும், ஒரு கெளரவமான வேலையுமுண்டும் என்பதுதான்.