Shadow

மெய் விமர்சனம்

mei-review

மெய் – உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம்.

அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.

நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது.

தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள்ளார். படம் கவருவதற்கு, இவரைப் போன்ற நடிகர்களே காரணம். ஜார்ஜ் மரியான், பழைய ஜோக் தங்கதுரை, மதன் கோபால், E.ராமதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், அருள் ஷங்கர் ஆகியோர் படத்தின் இயல்புத்தன்மையைத் தக்க வைக்கின்றனர். கதைக்குள் நாயகியின் பாத்திரம் இருந்தாலும், சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அமையவில்லை.

எஸ்.ஐ. அஸ்வகோஷ், அபிஷேக் என்ற வழக்கமான டெம்ப்ளெட் வில்லன்களும், யூகிக்க முடிந்த கதையும், விறுவிறுப்பற்ற திரைக்கதையும் படத்தின் மைனஸ்க்குக் காரணமாகின்றன. படத்தின் பிளஸ் என்றால், அது
இன்ஸ்பெக்டராய் நடித்திருக்கும் ஆடுகளம் கிஷோர் தான். மிகக் குறைவான காட்சிகள், பெரிய ஸ்க்ரீன் பிரசென்ஸ்க்கான வாய்ப்பில்லாவிட்டாலும் படத்தின் நாயகனாகப் பரிணமிக்கிறார். அவரது அனுபவமிக்க நடிப்பு ஒரு காரணம் என்றால், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஆழமே பிரதான காரணம்.