60 கேமராக்கள் என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில், 60 ஸ்கிரீனுடன் தோன்றினார் கமல். பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. கமலே சொன்னது போல் இத்தனை கேமராவில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கான ஃபூட்டேஜ் எடுத்து, தேவையானது, தேவையில்லாதது எனப் பிரித்து, எடிட் பண்றதெல்லாம் சரியான வேலையாக இருக்கும். அதற்கே ஒரு பெரிய டீம் தேவை. ஆனால் அதில்லாமல் சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள், சமூக அக்கறையாளர்கள் என இன்னொரு டீம் இருக்காம். எதை காண்பிக்க வேண்டும், எது வேண்டாம் என இவங்க எல்லோரும் சேர்ந்து தான் முடிவு செய்வதாகச் சொன்னார்.
வெள்ளிக்கிழமை பாட்டு போட்டும் யாரும் பெரிதாக எழுந்திரிக்கவில்லை.
காபி சாப்பிட்டு பார்த்தால், மீரா மாதிரி யோகா பண்ணிக் கொண்டிருந்தார் கஸ். சோபாவில் உட்கார்ந்து தான் யோகா செய்வார்களா? சீன் போட்டாலும் அதில் கொஞ்சமாச்சும் மூளையை உபயோகிக்க வேண்டாமா? பாய்ஸ் டீம் அதைக் கலாய்த்துக் கொண்டிருக்க, கூட இருந்தது யார் எனப் பார்த்தால், அங்கே சேரன். ‘தக்காளி, நான் தனியா இருந்தா தான்டா என்னை டார்கெட் பண்ணுவீங்க? உங்களோடவே சேர்ந்தா என்ன செய்வீங்கனு பார்க்கலாம்டா!’ என ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் போல.
ஆனால் நேற்றே சொன்ன மாதிரி வனிதா, கஸ்தூரி தவிர மீதி எல்லோருக்கும் நடுவில் ஒரு நல்ல பிணைப்பு வந்துவிட்டது. அதை கமலும் குறிப்பிட்டுச் சொன்னார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில் உருப்படியாக நடந்தது தர்சன் – ஷெரின் சமாதானம் மட்டும் தான். ஒரு சில்லி மேட்டருக்கு யார் முதலில் பேசுவதென ஈகோ உள்ள புகுந்ததால் இப்படி ஒரு பிரச்சனை. தர்ஷன் தான் முதலில் பேசினார். ஆனால் அப்பவும் காபி வேணும் எனக் கேட்டுப் போட்டுப் கொடுத்த உடனே, ‘இதுக்கு தான் வந்தேன்’ என மறுபடியும் ஷெரினை டீஸ் பண்ணினது செம்ம. இரண்டு பேருமே ஜாலியாகச் சிரித்துக் கொண்டே பேசி சமாதானம் ஆகிவிட்டனர். அதை சிரிப்பு என்று கூடச் சொல்ல முடியாது. வெட்கம் கலந்த சிரிப்பு. ஷெரின் வெட்கப்படும் போது மேலும் அழகாகிறார்.
அதற்கு முன்னாடி யமஹா பைக் வழங்கிய ஒரு விளம்பர டாஸ்க். அதில் தர்சன் தான் வெற்றி பெற்றார். அடுத்து அகம் டிவி வழியே கமல்.
ஷெரினின் கேப்டன்சியை ரொம்பவும் பாராட்டினார். கேப்டனாக அவர் பேசின விஷயங்கள், யாருடைய தலையீடும் இல்லாமல் எடுத்த முடிவுகள் எல்லாமே பட்டாசு ரகம். அதைச் சரியாகச் சுட்டிக் காட்டிப் பேசினார். கேப்டன் சேரனும் பாராட்டப்பட்டார்.
அடுத்து, ‘சத்துணவு ஆயா’ என கஸ்தூரியைக் கலாய்த்த சாண்டிக்கு ஒரு குட்டு வைத்தார். சத்துணவோட மகிமை, அருமை, பெருமை இதெல்லாம் எடுத்துச் சொல்லி, இது அத்துமீறல் என்று சுட்டிக் காட்டி சாண்டியை மன்னிப்பும் கேட்க வைத்தார். ‘நானும் சத்துணவு சாப்பிட்டு வளர்ந்த பையன் தான் சார்’ எனச் சொல்லி சாண்டி தொபக்கடீர் என சரண்டர் ஆனார்.
‘லக்சரி பட்ஜெட் டாஸ்க்ல எதனால பாயின்ட் போச்சுத் தெரியுமா?’ எனக் கேட்ட போது யாருமே வாயை திறக்கவில்லை. மைக்கை மறைத்துப் பேசினதால் என சன்னக் குரல் தான் கேட்டது. ‘நீங்க செஞ்ச விதி மீறலை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க’ எனச் சொல்லி ஒரு குறும்படம் காட்டினார். கல்பிரிட் யாரென்றால், கவினும் – லாஸும் தான். இரவு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, மைக்கில் இருக்கின்ற பேட்டரியைக் கழட்டிவிட்டு இரண்டு பேரும் ரொம்ப பக்கத்தில் வந்து ரகசியம் பேசியுள்ளனர்.
‘டெக்னிக்கல் டீமுக்கு வேணா வந்துருங்க கவின். ஏன்னா மைக் எல்லாம் பார்ட் பார்ட்டா கழட்டுறீங்க. அவங்களுக்கு வேற சொல்லி கொடுக்கறிங்க’ என ஊமைக்குத்தாகக் குத்தினார் கமல். ‘எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுடாதீங்க. வீ ஆர் வாட்சிங். கேமரா முன்னாடி பேச முடியாத ரகசியம்னா, வெளியே போய் பேசிக்கலாமே!’ எனச் சொன்ன போது தான் இதில் இருக்கின்ற சீரியஸ்னெஸ் கவின் லாஸுக்குப் புரிந்திருக்கும். நார்மலாக கமல் போனதுக்கு அப்புறம், அவர் என்ன பேசினார், மக்கள் எங்க கை தட்டினாங்க என டீ கோடிங் செய்வார் கவின். இதையும் சரியாக யோசித்துத் திருந்தினால் சரி. கவினை விட இது லாஸ்க்கு தான் பெரிய ஷாக்கா இருக்கும். ஏன்னா முதல் சில வாரங்களில் கிடைத்த கைதட்டல் இப்பொழுது சுத்தமாக இல்லை. இப்படியே போனால் வனிதாவுக்குல் கிடைக்கின்ற மாதிரி நெகட்டிவ் கிளாப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கு. சேரன், தர்ஷன், சாண்டி தான் அதிக க்ளாப்ஸ் வாங்குகின்றனர்.
கவின் – லாஸ்க்கு சேரன் அட்வைஸ் செய்ததைப் பற்றிக் கேட்டார். அதைக் குறிப்பிட்டுக் கேட்டதால, சேரன் பேசின கருத்துக்களில் அவருக்கும் முழு உடன்பாடு என்று யூகிக்க முடிகிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
சேரனை நாமினேட் செய்து விட்டு அழுததைப் பற்றி லாஸிடம் காரணம் கேட்டார் கமல். கூடவே, ‘கவின், இதுல உங்களுக்கும் பங்கிருக்கு இல்லையா?’ என்றும் கேட்டார். ‘லாஸ் தன்னை நாமினேட் செய்தது எனக்கு முன்னாடியே தெரியும், நான் வெளிய காமிச்சுக்கலை’ என சேரன் சொன்னதைக் கேட்டு நம்மைப் போலவே கமலும் ஆச்சரியப்பட்டார்.
சேரன் சாப்பிட உட்காந்து விட்டு வெயிட் பண்ணிக் கொண்டிருந்ததை பற்றிப் பேச்சு வந்த பொழுதும் லாஸ்க்கு இடி தான் விழுந்தது. அதற்கு சாட்சியாக, வனிதாவிடம் கேட்க அப்பவும் நெகட்டிவ் க்ளாப்ஸ் விழுந்தது. கமலுமே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எனச் சொன்ன மாதிரி இருந்தது.
அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் பற்றின டாபிக் வந்தது. டாஸ்க்கை யார் சரியாகச் செய்யவில்லையோ அதை தான் பார்க்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவங்க பெர்ஃபாமன்ஸைப் பார்க்க வேண்டியதில்லை எனச் சொன்னார். இதையே தான் மது பேச ஆரம்பிட்து, அது ஒரு பெரிய சண்டையில் முடிந்தது.
அடுத்து வாத்து சண்டையைப் பற்றிப் பேசிப் பேசி கமலே சோர்ந்துவிட்டார். ‘ஸ்கூல் டாஸ்க்ல யார் வொர்ஸ்ட் பர்பாமர்னு ஓபனா சொல்லுங்க’ என கமல் கேட்கவும், எல்லோருக்கும் ஷாக். ‘அது முடிஞ்சு போச்சு’ என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த எல்லோரும் வனிதா – கஸ் பேரை தான் சொன்னார்கள். முகின் அதற்கான காரணத்தைச் சொல்லும் போதும் ஆடியன்ஸிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ்.
பெரும்பான்மை வனிதா – கஸ் வந்ததால், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் எனக் கேட்ட உடனே, பாய்ஸ் டீம் புகுந்து விளையாடி விட்டனர். வனிதா கொலைவெறியில் தகித்துக் கொண்டிருப்பார்.
மொத்தத்தில் கவின் – லாஸ்க்கு இது ஒரு ரியாலிட்டி செக். தனக்குப் பிடித்ததை செய்தாலும் அது மக்களுக்கும் கமலுக்கும் பிடிக்கலை என ஓப்பனாகத் தெரிந்திருக்கு. ஆக, இதற்கு இவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்க எனப் பார்க்கவேண்டும்.
கஸ்தூரி: சார்..
எனப் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம், ‘அய்யய்யோ யம்மா, என்னைப் பெத்த யம்மா, எங்கம்மா போயிட்ட? என்னை காப்பாத்தும்மா’ என ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கார்டர் ஆன் ஆனதால், அவங்க பேசினது எதுவும் கேட்காமல் தப்பிட்து விட்டேன்.