இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, ‘மெர்லின்’ எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார்.
மனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகினியில் தொடங்கி பேயிலேயே படத்தை முடித்துள்ளார்.
மோகினியாக, மெர்லினாக, ரஷ்ய பேகமாக என மூன்று பாத்திரங்களிலும் கச்சிதமாகப் பொருந்துகிறார் அஸ்வினி. மெர்லினாக வரும் பரதநாட்டிய ஃப்ளாஷ்-பேக் நன்றாக உள்ளது. ரிசா கதாபாத்திரத்தைக் கவர்ச்சிக்காக என்றும் மட்டும் இல்லாமல் இன்னும் நன்றாக குணச்சித்திர நடிகையாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மாறுபட்ட வேடத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தன்னிருப்பை அழுத்தமாகப் பயன்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் கதாநாயகனாக வருகிறார் ‘லொள்ளு சபா’ ஜீவா. ஆனாலும் அவரை எப்படிப் பயன்படுத்துவது என்ற தெளிவு இயக்குநர் வ.கீராக்குக் கடைசி வரை ஏற்படவில்லை போலும். ஆதவன் வரும் காட்சியை படத்தொகுப்பாளர் சாமுவேல் கத்தரித்து, மேலும் படத்தை க்ரிஸ்ப் ஆக்கியிருக்கலாம்.
படத்தை முழுவதும் தாங்குவது வெற்றியாக நடித்திருக்கும் விஷ்ணுப்பிரியன் தான். அழகு என்பது முகத்தில் அன்று அகத்தில் உள்ளதென அவர் உணரும் தருணம் கவித்துவமாக உள்ளது. ‘கயல்’ தேவராஜ் பேயை ஓட்டிவிட்டு, அதற்குத் தரும் விளக்கம் நன்றாக உள்ளது.
கீராவின் மெர்லின் சாமானிய மனிதனின் பயம், பதற்றம், குற்றவுணர்வை ஆழமாய்ப் பிரதிபலித்துள்ளது.