ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் அவருடையது. எந்த வாகனமாக இருந்தாலும், யாருடையது என்றாலும் தூக்கி விடுவார். நண்பர்களை எக்காரணம் கொண்டும் கைவிடாதவர். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மரணத்துக்குத் தனது காதலி தான் காரணமென அறிந்து, அவளைக் கொல்ல நாயகன் சபதமேற்பதில் இருந்தே படம் தொடங்குகிறது.
திவ்யாவாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். தனது தாயின் ஞாபகமார்த்தமாக வைத்திருக்கும் செயினை, வழிபறித் திருடனிடம் இருந்து மீட்பதால் நாயகனிடம் காதல் கொள்ளும் அக்மார்க் தமிழ் நாயகி. தான் வஞ்சிக்கப்பட்டோம் என அவர் எடுக்கும் முடிவு விபரீதமானது.
ஸ்கெட்ச் படத்தில் என்ன வேடமோ, அதே வேடத்தில் அருள்தாஸ் இப்படத்திலும் நடித்துள்ளார். சேட்டாக நடித்துள்ள UB மகேஷ்வரன், இவ்வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். படம் போரடிக்காமல் செல்கிறது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில், அப்புக்குட்டியை வைத்துப் போடும் மொக்கையை மட்டும் தவிர்த்திருக்கலாம். தண்டாக நடித்திருக்கும் கலையரசன், தன் காதல் தோல்வி அத்தியாயத்தின் காரணமாய்த் தனித்துத் தெரிகிறார்.
நடன இயக்குநர் கல்யாண், நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். அவரது மனைவியாக கெளசல்யா நடித்துள்ளார். கல்யாணின் அத்தியாயம் நிறைவாக இருந்தாலும், இடைவேளைக்கு முன்னான அவரது அறிமுகம் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இடைவேளைக்கான காட்சியும் மிக மிகச் சுமாராக உள்ளது. தனிமையில் வாடி, தன் மகளின் பாசத்தை மீண்டும் பெற யத்தனிக்கும் கல்யாண், சாதுரியமாகத் தன் மகளைத் தூண்டிலாக உபயோகப்படுத்த முனைவாரே அன்றி, படத்தில் வருவது போல் வில்லத்தனமாக எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.
அதிகாரத்தில் உள்ளவனின் கோபத்துக்கு ஆளானாலோ, அப்படி ஆளாகுபவனின் கூட்டாளியாக இருந்தாலோ கூட என்னாகும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SK மதி.