Shadow

மூக்குத்தி அம்மன் விமர்சனம்

Mookuthi amman review

அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி. 

மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளின் பெயரைக் கேட்டாலே கோபத்தில் முகம் சிவக்கிறார். மற்ற மதக் கடவுள்களைப் பெரிய மனதுடன் மன்னிக்கும் கிராம தேவதையான மூக்குத்தி அம்மனுக்கு, பெருந்தெய்வமாகிவிட்ட பெருமாளைப் பொறுத்துக் கொள்ளும் சகிப்பின்மை சித்திக்கவில்லை. அதே அம்மன், கடவுள் மறுப்புப் போராட்டத்தில் கறுப்பு சட்டைக்காரர் பேசும் பொழுது, “ஒரு கடவுளை ஒசத்தி, இன்னொரு கடவுளைத் திட்டுறான் பாரு, அவன் டேஞ்சர்” என்கிறார். ஆனால் அவரே பெருமாள் என்றால் பொறாமையும் கோபமும் கொள்கிறார், ஜீசஸை நண்பரென்கிறார். ஆக..

சிறுதெய்வங்கள் எனச் சொல்லப்படும் நாட்டார் தெய்வ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை எனச் சொல்ல முனைந்துள்ளார் RJ பாலாஜி. ஆனால், சிறுதெய்வ வழிபாட்டின் மேன்மையை வலியுறுத்திச் சொல்ல அவரது திரைக்கதை எந்த மெனக்கெடலும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் போகிற போக்கில் வசனங்களால் கிண்டல் செய்வதோடு அவரது இயக்கம் மொட்டையாக நின்று விடுகிறது. ஒரு தெளிவான முடிவை நோக்கிப் பயணிக்காமல் கிண்டல் செய்வது மட்டுமே பிரதானம் என்ற மேலோட்டமான அணுகுமுறையால் படத்தோடு ஒன்ற முடியாமல் போகிறது. RJ பாலாஜிக்கு அம்மனின் அருளால் மாளிகை வீடு கிடைத்துவிடுகிறது. அந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்த அவர் எடுத்துக் கொள்ளும் நேரம் அயற்சியை அளிக்கிறது. அம்மாளிகை மறையும் போதும், அதே கால அளவை எடுத்துப் புலம்பிப் பொறுமையைச் சோதிக்கிறார். படத்தொகுப்பாளர் R.K.செல்வா காட்சிகளை நறுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கம்யூனிஸ்ட்டாக வரும் RJ பாலாஜியின் தாத்தா மெளலி, மூக்குத்தி அம்மனின் சித்துவிளையாட்டுக்கே சவால் விடுமளவு அடிக்கடி காணாமல் போய், சம்பந்தமே இல்லாத கணத்தில் தோன்றுகிறார். மருந்துக்குக் கூட யாரும் நாரோயில் வட்டார மொழியைப் பேச முற்படவில்லை. இந்த அற்ப மானுடப் பதர்கள் பேசாவிட்டால் கூடப் பரவாயில்லை, நாட்டுப்புறத் தெய்வமான அம்மனும் கூடவா? 🙁

விசாரணையில் பயமுறுத்திய அஜய் கோஷ், கார்போரெட் சாமியாராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர், ‘சண்டா’ என அலறி அச்சுறுத்திய ராமிரெட்டி (‘அம்மன்’ திரைப்படம், 1995) போல் பயமுறுத்தவும் இல்லை, நகைச்சுவைக்கும் உதவவில்லை. இடைவேளை விட்டுப் படம் தொடங்கியதும், ‘நாம ஹவாலா செய்றோம். அதுல கமிஷன் கிடைக்குது’ எனச் சொல்றார். ஆனால், படத்தின் முடிவு சப்பென்று முடிகிறது. மகன், ‘லூசு’ எனத் திட்ட, ‘அது உண்மை தான்’ என ஊர்வசி கண் கலங்கும் இடத்தில், தன் அனுபவ நடிப்பால் நெகிழ வைக்கிறார். சமையலில் இருந்து ஒருநாள் விடுப்பு கேட்கும் ஸ்முருதி வெங்கட்டும் கலக்கியுள்ளார் (இதைப் பற்றி, உல்லாசக்கப்பல் பயணம் நூல் வெளியீட்டு விழாவில் பேசப்பட்டது ஞாபகத்திற்கு வந்து போனது). 

ஆனால், RJ பாலாஜியிடம் ஓர் அடிப்படை நேர்மையுள்ளது. அவரது படத்தை அவரே கலாய்த்துக் கொள்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் பார்க்கும் பொழுது, பார்வையாளர்களுக்குத் தோன்றுவதை, அவரே ஓரிடத்தில், “இது சமுத்திரக்கனி படத்தில் வர்ற சாமி” எனக் கடுப்புடன் சொல்லுவார். எட்டு மாநிலத்து முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாவில், ஹவாலா மோசடியில் கையும் களவுமாக சாமியார் வில்லனை அம்மனோ, RJ பாலாஜியோ மாட்டி விடுவார் எனப் பார்த்தால், அம்மன் சமுத்திரக்கனி அவதாரமெடுத்து மக்களைத் திருத்தி விடுகிறார்.

படத்தின் பலம் என்றால் அது நயன்தாராவும், அவரது உடையும், அலங்காரமும் மட்டுமே. டிஸ்னி கார்டூன் பார்த்து வளர்ந்த லிட்டில் பிரின்சஸ் போல, ஆல் டைம் ஃபுல் மேக்கப்பில்  வரும் சிறுதெய்வம் என்பது அழகான ஃபேண்டஸி + முரண். நயன்தாரா அணிந்து வரும் அழகான ஜொலிக்கும் மூக்குத்திக்கு முன் எல்லாக் குறைகளும் நிறைகளாகிவிடுகின்றன. என்றாலும், எட்டு மாநில முதலமைச்சர்களுக்கு, ஒரு மிக்ச்சர் பாக்கெட் கூடத் தராமல் இங்கிதமின்றி வாது புரிகின்றனர் அம்மனும் வில்லனும். அவர்கள் நம் தமிழ் ஹாஸ்பிட்டாலிட்டியைப் பற்றி என்ன நினைப்பார்கள்?