Shadow

மோசடி விமர்சனம்

mosadi-movie-review

நூறு கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கிருஷ்ணா எனும் இளைஞனுக்கு. இல்லையெனில் கிருஷ்ணாவின் மனைவி ராதாவைக் கொன்று விடுவார் அமைச்சர். கிருஷ்ணா பல வகையான மோசடிகள் செய்து பணத்தைச் சேர்க்க முயற்சி செய்கிறான். அவனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா என்பது தான் படத்தின் கதை.

படத்தின் முதற்பாதி, சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது. முதலில் ஆசையை நன்றாகத் தூண்டிவிட்டு, அவர்களின் பணத்தைக் கறக்கிறான் கிருஷ்ணா. வயலில் புதையல் இருப்பதாக நம்ப வைத்து, அதை எடுக்கப் பூஜைக்கு அதற்கு பால் ஆமை தேவை எனச் சொல்லி பணம் பறக்கிறான். வெள்ளைப் பூனைக்கு கருப்பு டை அடித்து, கருப்பு வைரம் எனச் சொல்லி ஒரு நபரின் மூட நம்பிக்கையைக் காசாக்குகிறான். வலம்புரி சங்கின் விலை 20 கோடி பெறுமானம் என ஒருவரின் ஆசையைத் தூண்டி, 1 கோடிக்கு ஒரு சங்கை விக்கிறான். குறுக்கு வழியில் பணம் பார்க்க நினைக்கும் பழைய நூல் வியாபாரியிடம், ஒன்று கொடுத்தால் மூன்று என ஆசை காட்டி, 20 கோடிக்கு 60 கோடி ரூபாய் ஒரிஜினல் கள்ளநோட்டைப் பாகிஸ்தானில் இருந்து வரவழைத்துத் தருவதாக ஏமாற்றுகிறான் கிருஷ்ணா. கள்ளநோட்டு தூண்டிலில் விழும் பலர், குறிப்பாக ஈரோடு, கோவை தொழிலதிபர்கள் கிருஷ்ணாவின் 100 கோடி இலக்கைச் சுலபமாகச் சாத்தியமாக்குகிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில், கிருஷ்ணாவுக்கு ஏன் பணம் தேவைப்படுகிறது என்ற கதையை ஃப்ளாஷ்-பேக்கில் சொல்கின்றனர். யாரென்றே தெரியாத ராதா மீது, அவளும் அநாதை என்ற காரணத்தினால் எக்கச்சக்கமான காதலில் விழுகிறான் கிருஷ்ணன். அமைச்சர் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்கும் நாளில், மோடி பெருமகனார் டீமானிட்டைசேஷன் அறிவிப்பை வெளியிடுகிறார். டாஸ்மாக், பேருந்து டெப்போ, சாமானிய மக்களுக்கு 500 ரூபாய் கொடுத்து, வங்கி ஊழியர்களுக்கு பெர்சென்டேஜில் கொடுத்து, 100 கோடியையும் 2000 ரூபாய் நோட்டாக அமைச்சருக்கு மாற்றித் தருகிறான் கிருஷ்ணா.

அந்த 100 கோடியை யாரோ திருடி விட, அந்தப் பழி கிருஷ்ணா மேல் விழுகிறது. கொலக்காண்டு ஆகும் அமைச்சர் ராதாவைப் பிணைகைதியாகப் பிடித்து விடுவதால், கிருஷ்ணா முப்பதே நாளில் 100 கோடி சம்பாதிக்கிறான். அவன் மக்களை ஏமாற்றுவதும், பழைய செல்லாத 500/1000 நோட்டை 2000 நோட்டாக மாற்றுவதும் சுவாரசியம். எனினும், படத்தின் ஒலி வடிவமைப்பும், டப்பிங்கின் தரமும் மிகவும் மோசம். நாயகன், நாயகி இருவருமே பக்கத்து மாநிலத்தவர்கள் என்பதால், தங்கள் மழலைப் பேச்சில், சீரியசான காட்சிகளிலும் தூய தமிழில் பேசும் பொழுது சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. கிருஷ்ணாவாக விஜூவும், ராதாவாக பல்லவி டோராவும் நடித்துள்ளனர். அமைச்சராக நடித்திருக்கும் N.C.B.விஜயனின் பேச்சும் உடற்மொழியும் மட்டுந்தான் கொஞ்சமாவது ஒட்டுகிறது. மற்றவர்கள் எல்லாம், பாடாவதி டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுமளவு சோதிக்கின்றனர்.

ஷாஜகானின் இசையில், பொடலங்காய புட்டு பாருடா என்ற பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷும், ராஜலட்சுமியும் பாடியுள்ளனர். மணிஅமுதவன் வரிகளில், பிரியங்காவும் – முகமது இஸ்லாமும் பாடிய இறகைப் போலே பாடல் நன்றாக உள்ளது. இந்தப் பாடலின் ஒளிப்பதிவிற்கு ஒளிப்பதிவாளர் R.மணிகண்டன் விசேஷ கவனம் செலுத்தியுள்ளது பளீச்செனத் தெரிகிறது.

mosadi-font

மோசடியில், ‘ச’-வை மட்டும் சின்னதாகப் போட்டு மோடி எனத் தலைப்பிட்டிருந்தனர். ஆக, ஒரு சம்பவம் இருக்குமென நினைத்தால், இயக்குநர் K.ஜெகதீசன் கடைசி 10 நிமிடத்தில் மிகத் தரமான சம்பவத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார். கிருஷ்ணன் அமைச்சரிடம், உத்தம ஆவேசத்தில் பேசும் காட்சிகள் அதகளம். உதாரணத்திற்கு அதிலிருந்து ஒரு சிறு துளி  – ‘நீங்க எல்லாம் கறுப்புப்பணத்தை இப்படிப் பதுக்குவதால் தான்டா, மோடி நாடு நாடாகப் போயிட்டிருக்கார்’. வாழ்நாளிலேயே, இப்படி மெர்சலானதொரு தெறி க்ளைமேக்ஸ் வசனத்தைக் கேட்டதே இல்லை. அதன் பின் தான் படத்தின் தலைப்பிற்குப் பொட்டில் அடித்தாற்போல் பொருள் விளங்குகிறது. அதாவது மோசடி செய்பவர்கள் மோடியின் ஆட்சியில் கைது செய்யப்படுவர்களாமாம். இப்படம் மட்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டால், பப்பரப்பா பான்பராக்காய் பிளாக்-பஸ்டர் ஹிட்டடிக்கும். ஆமென்!

படத்தில் என்ன ஒரே வருத்தம் என்றால், அவ்வளவு அநியாயத்தை முதற்பாகத்தில் செய்து விட்டு, எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அமைச்சரைச் சொற்களால் கழுவேற்றும் நாயகனின் அந்தக் குணத்தை நினைத்தால்தான் கொஞ்சம் கெதக்கென்று இருக்கு. அது கூட இயக்குநரின் குறியீடாக இருக்கலாம். அமைச்சர் மட்டுமா மோசடி செய்கிறார்? மக்களும்தான் பேராசையில் மோசடியில் ஈடுபடுகின்றனர் என இடித்துரைப்பதற்காக இருக்கும். அதை விட அட்டகாசம், திருந்துங்கள் அல்லது ‘மோசடி தொடரும்..’ எனப் படத்தை முடித்திருப்பதுதான்.