ஃப்ரென்ச் எழுத்தாளர் ரொமைன் எழுதிய முதல் நாவலான, ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகியா வார்ட்ரோப் (The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe)’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். போன வருடம் ஃபிரான்ஸில் வெளியான இப்படம், 21 ஜூன் 2019 அன்று இந்தியா, யு.எஸ்.ஏ., கனடா, யு.கே., மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியாகிறது.
‘பக்கிரி’ என தமிழில் டப் செய்யப்பட்டு இப்படத்தை Y NOTX வெளியிடுகிறது. ஒரு ஹாலிவுட் படத்தில், அதுவும் பிரபலமான ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைக்கதையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் நடித்திருப்பது, மிக முக்கியமான ஒரு மைல்கல் பாய்ச்சலாகவே கருதவேண்டும்.
ஃபகிர் என்ற சொல், உலக சுகங்களைத் துறந்து இறைஞ்சுண்டு வாழும் சூஃபி முஸ்லீம் பெரியவர்களைக் குறிப்பதாகும். காலப்போக்கில் இந்து மதத் துறவிகளையும் இப்பெயரால் குறிப்பிடத் தொடங்கினர். மக்களை ஏமாற்றும் வித்தையை, முதன்முதலில் ஒரு காவி உடையணிந்தவரைப் பார்த்தே படத்தின் நாயகனான ராஜகுமரகுரு லக்ஷ்மிபதி கற்றுக் கொள்கிறான். அப்படியே ஏமாற்றுக்கார ஃபகிராகவே வளர்ந்துவிடுகிறான். உடையில் மட்டுமே ஃபகிராய் வலம் வரும் ஒரு 420 தான் நாயகன்.
சிறு வயது ராஜகுமரகுருவாக நடித்திருக்கும் ஹார்ட்டி சிங் மனதைக் கொள்ளை கொள்கிறான். தன் தந்தை யாரென அம்மாவை இம்சிப்பதாகட்டும், உலகம் எவ்வளவு பெரியது எனக் கண்டுபிடிப்பதாகட்டும், தானொரு ஏழையென அவன் உணர்வதாகட்டும், பணம் சம்பாதிப்பதை லட்சியமாக வரித்துக் கொள்வதாகட்டும், ஹார்ட்டி சிங் பயங்கரமாக ஈர்க்கிறான். தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் அம்ருதா சாந்தும் மனதில் நிற்கும்படி நடித்துள்ளார்.
அம்மா இறந்து விட, தன் தந்தையைத் தேடி பாரீஸ் புறப்படுகிறான். பாரீசில், தனது விருப்பமான இகியா ஃபர்னிச்சர் கடைக்கு முதலில் செல்கிறான். அங்கிருந்து லண்டன், லண்டனில் இருந்து ஸ்பெயின், ஸ்பெயினில் இருந்து இத்தாலி, பின் பலூன் மூலமாக நடுக்கடலுக்கும், அங்கிருந்து கப்பலில் லிபியா என கர்மா ராஜகுமரகுருவைப் பந்தாடுகிறது. அவன் மேற்கொள்ளும் அசாதரணமான பயணமும், சந்திக்கும் மனிதர்களும் தான் இந்த ஜாலியான படம்.
அகதிகள் படும்பாடு, ஐரோப்பா நாடுகள் அகதிகளைத் தொல்லைகளாகப் பார்த்து நைஸாகப் பக்கத்து நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடும் அரசியல் என படம் சில சீரியசான விஷயங்களை அணுகியுள்ளது. ஆனால் ஜாலியாகவும், மேலோட்டமாகவும் கடந்துவிடுகிறது. இங்கிலாந்து ஆஃபீசர் ஸ்மித்தாக நடித்திருக்கும் பென் மில்லரின், பாடலும் நடனமும் கோமாளித்தனமாகத் தோன்றி எரிச்சலை வரவழைக்கிறது. முன்பே படம், நீர்த்துப் போன ஜாலியான வடிவத்தில் பயணிப்பதால், ஆஃபீசரின் ஸ்மித் கதாபாத்திரம் படத்தின் சீரியஸ்னஸை இன்னும் காலி பண்ணிவிடுகிறது.
பொன் விளையும் பூமியான இங்கிலாந்து செல்லும் லாரியில் தனுஷ் சந்திக்கும் சோமாலியா நாட்டு அகதி விரஜாக (மூலத்தில், சூடான் அகதி) பர்காத் அப்தி நடித்துள்ளார். அவரது முகம் மிகப் பரீச்சயமானது போல மனதுக்கு மிக நெருக்கமாகத் தோன்றுகிறார். லிபியாவில், கப்பலில் போய் தனுஷின் பணத்தை மீட்க உதவும் போது, ‘வன்முறை கூடாது’ என்ற அவர் கொள்கையும், அதற்கு அவர் காட்டும் சிரத்தையும் ரசிக்க வைக்கிறது. திரைக்கதையை இன்னும் சிரத்தை எடுத்துச் சுசுவாரசியமாக்கியிருக்கலாம்.
தனுஷைத் தவிர, மற்ற கதாபாத்திரங்களுக்கான ஸ்க்ரீன் டைம் ரொம்பக் கம்மி எனினும், பல நாட்டு மனிதர்களுமே அவர்களுக்குண்டான தன்மைகளோடு மனதில் பதிவது படத்தின் சிறப்புகளில் ஒன்று. கதாநாயகியின் லெஸ்பியன் அறை தோழி வரை படம் முடிந்தும் கூட ஞாபகத்தில் உழல்கின்றனர். இந்த மொத்த படமுமே, சிறையிலுள்ள 3 சிறுவர்களுக்கு தனுஷ் சொல்லும் கதையாக நீள்கிறது. பொடியன்களுக்குச் சொல்லப்படும் கதையில், லெஸ்பியன் உறவைக் கேலிக்குரிய ஒன்றாக நகைச்சுவைக்காகக் கூட வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
படத்தில் சீரியஸ்னஸ் இல்லாவிட்டாலும், லிபியாவில், அகதிகளின் குறை கேட்டு தனுஷ் செய்யும் மேஜிக் அலாதியாக உள்ளது. லைட்-ஹார்டட்டாக, ஜாலியாக உலகைச் சுற்றிக் காண்பிக்கும் ஒரு படத்தை விரும்புபவர்களுக்கானது இயக்குநர் கென் ஸ்காட்டின் பக்கிரி.