Shadow

“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

Nibunan team

நிபுணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உண்டென நன்றி தெரிவித்தது நிபுணன் படக்குழு.

“நிபுணன் வரவேற்பிற்குக் காரணம் ஊடகத்தின் நேர்மையான விமர்சனமே! அதனுடன் மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிக பெரிய அடித்தளமாகும்” என்றார் தயாரிப்பாளர் உமேஷ்.

“ நிபுணன் படம் 2015-இல் தொடங்கிய பின் இரண்டு வெள்ளங்களைப் பார்த்துவிட்டது. இந்தக் கதை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜூன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிகப் பெருமை. இந்தப் படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் இயக்குநர் அருண் வைத்யநாதன். மலையாளத்தில் தான் இயக்கிய பெருச்சாழி போல், தமிழில் ‘பொலிட்டிகல் சட்டையர்’ படமெடுக்க ஆவல் இருப்பினும், அப்படம் எடுத்தால் தான் மீண்டும் அமெரிக்காவே போய் விடவேண்டியது தான் என்றார். அதற்கான சகிப்புத்தன்மை இங்கில்லை எனச் சொன்ன அருண், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் விரும்பினால் அப்படியொரு படம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

“கஸ்ட்டப்பட்டு ஒரு படம் எடுத்தோம். நீங்களும் பார்த்து, ரொம்ப நல்ல வரவேற்பு கொடுத்துட்டீங்க. எல்லாம் முடிந்த பின், மறக்காம நன்றி சொல்ல ஒரு விழாவை ஏற்பாடு செய்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த 150 படப் பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனைத் திரைக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குநர் அருண் வைத்யநாதனுக்கு நன்றி” என்று கூறினார்.

தனது 151 வது படமான “சொல்லி விடவா” எனும் காதல் கதை என்றார் அர்ஜூன். அவரது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்து அர்ஜூனே இயக்குகிறார். அதில் தானொரு மாறுபட்ட சிறு வேடத்தில் நடிக்கிறார். “காதல் கதைகள் எழுதி வைத்திருந்தாலும், ‘ஆக்ஷன் கிங்’ என்ற எனது பட்டம் அதற்குத் தடையாக இருந்ததது. இப்போ தான் வாய்ப்புக் கிடைத்தது. என் மகளை வைத்து இயக்குகிறேன்” எனப் புன்னகைத்தார் அர்ஜூன்.