
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் 150வது படம்.
ரத்தத்தில் தோய்ந்த துணி உடுத்திய பொம்மை ஒன்று டி.எஸ்.பி. ரஞ்சித் காளிதாஸிற்கு வருகிறது. அதன் பின் தொடர் கொலைகள் நடக்கின்றன. யார் ஏன் எதற்குச் செய்கிறார் என்பதை ரஞ்சித் துப்புத் துலக்குவது தான் படத்தின் கதை.
கலை இயக்குநர் ஆறுச்சாமியும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் தான் கேமிராவுக்குப் பின்னுள்ள படத்தின் உண்மையான ஹீரோக்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு கதகளி ஓவியம் ஒரு பக்கம் கோணலாகச் சாய்வதில் தொடங்குகிறது படம். படம் போரடிக்காமல் (bore) போக முக்கியமான காரணம் அதன் அசத்தலான விஷுவல்ஸ்களால் தான்.
கடைசியில் முகமூடியை அவிழ்க்கும் கதாபாத்திரத்தினைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் அருண் வைத்யநாதன். அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி என டீமாகப் புலனாய்வு செய்கின்றனர். டி.எஸ்.பி. ரஞ்சித் காளிதாஸாக அர்ஜூன் கலக்கியுள்ளார். கொலைக்காரன் விட்டுச் செல்லும் புதிரை முடிச்சவிழ்க்கும் விதமாகட்டும், ஸ்ருதி ஹரிஹரனுடனான காட்சிகளாகட்டும், அர்ஜூனின் அனுபவம் மிளிர்கிறது என்றே சொல்லவேண்டும்.
படத்தின் சர்ப்ரைஸ் ஃபேக்டர் என்றால் சக அதிகாரிகளான பிரசன்னா மற்றும் வரலட்சுமியின் காம்போவைச் சொல்லலாம். ஜாலியாகவும், அதே சமயம் சீரியசாகவும் போகும் அவர்களுக்கு இடையேயான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
சுமன் மற்றும் சுஹாசினியின் எபிசோட் படத்திற்கு வலு சேர்த்தாலும், முகமூடிக்கு அவர்களுடன் இருக்கும் எமோஷ்னல் உறவை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் அருண். அதனாலோ என்னவோ, படத்தின் விறுவிறுப்பான ஓட்டம் க்ளைமேக்ஸில் சற்றே சுணக்கம் அடைகிறது. தமிழ் சினிமா வில்லன் இலக்கணத்திற்கு உட்பட்டு, தான் இன்னார், தன்னால் அது இயலுமென வெற்றுச் சவால்களாக வசனம் பேசி ஓய்கிறார். முகமூடியின் மேல் வளர்த்த பிம்பத்தை, இயக்குநர் க்ளைமேக்ஸில் இன்னும் அதிகப்படுத்தி இருந்தால், படத்தின் லெவல் வேறு மாதிரி இருந்திருக்கும். அர்ஜூனுக்கு வரும் பார்க்கின்ஸன்ஸ் நோயினால் கட்டமைக்கப்படும் காட்சிகளை எமோஷ்னலாகப் பொறுத்திப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனினும் படத்தில் அழகாக உபயோகித்துள்ளார் அருண்.
கதை முடிந்த பின், படம் முடியும் முன், அர்ஜூன் போடும் திட்டம் அதி சுவாரசியம். ரஞ்சித் காளிதாஸ் ஒரு நிபுணர் தானெனப் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.