Shadow

பண்டிகையின் மூன்று பாடல்

Music director R.H.Vikram

ரங்கூன் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘. இந்தப் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார்.

இப்படத்தைக் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பகிர்ந்து கொள்கையில், ”பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நானும் பெரோஸும் உறுதியாக இருந்தோம்.

இப்படத்தின் முதல் பாடல் ‘காங்ஸ்டர் ராப்’ வகையைச் சேரும். இப்படத்தின் கதைக்களத்தைத் தெளிவாகச் சித்தரிக்கும் பாட்டு இது. கதாநாயகன் , வில்லன் மற்றும் மக்கள் கோணத்தில் எழுதப்பட்ட பாட்டு இது. இந்தச் சூழ்நிலைக்காக நான் கம்போஸ் செய்த முதல் டியூனே டைரக்டருக்குப் பிடித்துவிட்டது. அந்த டியூனில் இடம்பெறும் பாடல், படத்தின் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும்.

பண்டிகையின் இரண்டாவது பாட்டு, ஒரு மாறுபட்ட டூயட் பாட்டு. கார்த்திக் இப்பாடலைப் பாடியுள்ளார். கதாநாயகனுக்கு அவனது மனசாட்சிக்கும் நடக்கும் காதல் பற்றிய வாக்குவாதமே இப்பாடல். கதாநாயகனுக்கு இயல்பாகவும், அவனது மனசாட்சி பாடும் வரிகளுக்கு தனது குரலை வேறு விதமாக மாற்றியும் கார்த்திக் பாடியுள்ளார். இப்பாடலைக் கேட்ட அனைவரும் இரு குரல்களும் கார்த்திக்கினுடையது என்று நான் கூறிய பொழுது நம்பவே இல்லை. அவ்வளவு சிறப்பாக கார்த்திக் பாடியுள்ளார் .

இப்படத்தின் மூன்றாவது பாட்டு ஒரு கொண்டாட்ட குத்துப்பாட்டு . நிகிதா காந்தி , பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். இவர்களது துடிப்பான சிங்கிங் (singing), இப்பாடலுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ‘பண்டிகை ‘ அதிரடி, காதல், சண்டை என்று பல்வேறு திசைகளில் பயணிப்பதால் பின்னணி இசை, இந்தப் படத்துக்குக் கூடுதல் பயமாகி வித்திட்டது. அதற்கு தனி கவனம் தேவைப்பட் டது. இப்படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் உள்ளன. ஒன்றுக்கு ஒன்று வேறு படும் வகையில் பின்னணி இசையமைத்துள்ளேன்.

பின்னணி இசையில், படத்தின் காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட விதமும், கதையோட்டம் மற்றும் திரையில் வரும் வண்ணங்களை உள் வாங்கிக் கொண்டு இசையமைப்பதே எனது வழக்கமும் விருப்பமும், அந்த வகையில் பண்டிகையின் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக வந்திருப்பதை நினைத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் பண்டிகை அணியின் உழைப்பை மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்” என்றார் மகிழ்ச்சியாக.