விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும்.
‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்கிற தலைப்பில் ரூபர்ட் வியாட்டின் இயக்கத்தில் உருவானது. அதன் தொடர் படம் தான், 2014இல் வெளியான, ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அப்படத்தை இயக்கியிருந்த மேட் ரீவ்ஸ் உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் அடுத்த பதிப்புதான், ‘வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’. மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் திரைக்கதையை அமைத்திட்டவர் மார்க் பொம்பேக்.
விலங்கினத்தை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி அச்சுறுத்துவதென்பது ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் செய்து வருவதே! மனிதக்குரங்கு குட்டி ஒன்று, அம்மாதிரியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட, நாளடைவில் அது வளர்ந்து, மனித குலத்தின் பிரத்தியேக இயல்புகளான சிந்தித்தல், பேசுதல் போன்ற குணாதிசயங்களைப் பெறுகின்றன.
சீசர் என்கிற அந்த மனிதக் குரங்கு, பெரும் திரளான தன் இனத்திடையே ஓர் அரசன் போல் கோலோச்சி நிற்கிறது!
கறார் பேர்வழியான கலோனல் தனது படை பலத்தின் வலிமையை மையமாக வைத்து, சீசரையும் சீசரது சகாக்களையும் ஒழித்துக் கட்ட முற்படுகிறார்.
இவ்விரு சாராருக்குமிடையே எழும் பெரும் போர், அழிவுக்கு வழிவகுப்பதோடு, கிரகத்தின் எதிர்காலத்தையும், இரு பிரிவில் யார் எஞ்சி நின்று ஆள்வார்கள் என்பதையும் தீர்மானிக்கும்.
‘ஏப்ஸ்’ என்கிற மனிதக்குரங்கு கதாபாத்திரத்திற்கு முதன்முதலாக வித்திட்டவர் பியரி பெளலி. ரிக் ஜாஃபா மற்றும் அமியா சில்வர் ஆகிய இருவரும் அதற்கு மெருகேற்றியவர்கள்!
இப்படத்தில் சீசரின் கதாபாத்திரம் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஜியாசினோ இசையமைக்க, மைக்கேல் செரிசின் ஒளிப்பதிவு செய்ய, வில்லியம் ஹோய் படத்தைத் தொகுத்துள்ளார்.
ஜூலை 14 அன்று, இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.