

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகை ஆஷ் மெலோவிற்குத் தமிழில் வெளியாகும் முதற்படம் இது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
படத்தின் இயக்குநர் ஜீன் மோசஸ், ”’பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். த்ரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு த்ரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளைச் செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காகப் பல விஷயங்களைப் புதிதாகச் செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு விஆர் மோஷன் (VR Motion) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் விஆர் மோஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களைக் கவர்வதற்காகத் தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் எந்தக் காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி” என்றார்.
வசனகர்த்தா நவீன், ”இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் என்னிடம், ‘ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது’ என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர். அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதிக் கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்தப் படத்தில் த்ரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாகப் பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர்” என்றார்.
பாடலாசிரியர் யூகி பிரவீண், ”2017 ஆம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லாப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார்” என்றார்.
இசையமைப்பாளர் போபோ சசி, “இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தைத் தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார்” என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ், ”படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களைச் சந்தித்தார். அப்போது, ‘நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்’ என அவர் கூறினார். அவரிடம், ‘நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தைத் திருப்பிப் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும்’ என்று விளக்கம் அளித்தேன்.
எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.
இசையமைப்பாளர் முரளி, “ படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன. இயக்குநர் ஜீன் மோசஸைச் சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள்”என்றார்.
நாயகன் வினோத், “நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்குப் பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி. இயக்குநர் ஜீன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தைச் சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையைச் சொன்னார். அதன் பிறகு அதனை விரிவுபடுத்திப் பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்”என்றார்.
கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல த்ரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.
‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘பேய் கதை’ வெளியாகிறது.


