32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 07/08/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 சினிமா
எழுத்து அளவு:

வடசென்னையில் ஜிம் வைத்திருக்கும் ஜீவா, மேகாவை உருகி உருகிக் காதலிக்கிறார். அப்பகுதி இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் போது, ரத்னா அவர்கள் கையில் கத்தியைக் கொடுத்துச் சீரழிக்கிறான். அதனால் கோபமுறும் ஜீவா, ‘மாஸ்’ எனும் அடைமொழியுடன் ரத்னாவை எதிர்க்கிறான். மோதல் முற்றும் தருவாயில் ஜீவாவின் காதலை நிரந்தரமாக இழக்கிறாள் மேகா. ஆனால், காற்று வாக்கில் காதலை இழந்தாலும், நூதனமான முறையில் மீண்டும் ஜீவாவுடனே இணைகிறார் மேகா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தின் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் சூப்பர் சுப்புராயனுக்கு, இது திரையுலகில் 50 ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெரரான ரோலில் தோன்றி, அதே வேகத்தில் மறைகிறார். படத்தின் முதற்பாதியின் சிக்கலும் அதுதான். கத்தியுடன் ஏகப்பட்டு பேர் குறுக்கமருக்க ஓடிக் கொண்டே உள்ளனர். கழுத்து அறுபட்டு இறக்கின்றனர். கதை நிகழும் களத்தின் சூழலையும் பிரச்சனையையும் அழுத்தமாகப் பதிவதற்காக கழுத்து அறுபடலை நீட்டித்துள்ளனர். ஆனால் அதை மையமாகக் கொண்டு, கோர்வையாகத் திரைக்கதை பயணிக்காமல், முட்டி உயர ஸ்பீட்-ப்ரேக்கரில் மாட்டி கன்னாபின்னாவென்று ஜம்ப் ஆகிறது.

ஜம்ப்பின் உயரம் எவ்வளவென்றால், உருகி உருகி காதலிக்கும் அம்பியாகப்பட்ட ஜீவா, திடீரென மாஸ் ஆகிறார். அனைவரது கழுத்தையும் அறுத்து, பெரும் ரெளடியாக ஃபார்மாகிவிடும் ரத்னா, சிறையில் இருந்து வந்ததும், தனக்குக் காதல் பூத்துவிட்டதென காமெடி செய்யத் தொடங்குகிறார். ‘ஓஹோ!’ என ரத்னாவின் மாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளும் முன், இளைஞர்களிடம் கத்தியைக் கொடுத்து வில்லனிசம் காட்டுகிறார். சரி திரும்பி வில்லனாகி விட்டார் போல் என நினைத்தால், மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கப்படும் பெண்ணிடம் ராஜா ராணி ஜெய் போல் காமெடியாகக் காதலைச் சொல்கிறார். தொடர் ஸ்பீட்-ப்ரேக்கரில் மாட்டியது போல் திரைக்கதை பார்வையாளர்களை ஒரு குலுக்கு குலுக்கி விடுகிறது.

ரத்னாவாக சாய் தீனா கலக்கியுள்ளார். கிழிந்த பனியனில் வரும்போதும் சரி, வண்ணமயமான டிசைனர் சட்டையில் வரும்போதும் சரி, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை உணர்ந்து தனியொருவராகப் போராடுகிறார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தைக் கல்லூரி வினோத்க்குக் கொடுத்துள்ளார் இயக்குநர். கதையாகச் சொல்லிப் பார்க்கும்போது, அவரது கதாபாத்திரத்திற்கு இருக்கும் அழுத்தம் திரையில் முழுவதுமாக வெளிப்படவில்லை.

மேகாவாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பிற்குக் காரணகர்த்தவான கதாபாத்திரம். மஞ்சு எனும் பாத்திரத்தில், இரண்டாவது கதாநாயகியாகப் பல்லவி நடித்துள்ளார். சொல்லிக் கொள்ளும்படியாக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. ஜீவாவாக மாஸ் ரவி நடித்துள்ளார். படத்தின் நாயகனான இவர்தான் படத்தின் இயக்குநரும். மாஸான தருணங்களைத் திரைக்கதையின் மூலமாக உருவாக்காமல், நினைத்த காட்சிகளிலெல்லாம் ஓர் அவசரத்துடன் மாஸ் காட்ட முனைந்துள்ளார். இப்படத்தின் கதையில், ஓர் அழகான காதலும், சுவாரசியமானதொரு ஆச்சரியமும் உள்ளன. ஆனால் அந்த ஆச்சரியத்தைத் தக்க வைக்க, வம்படியாக நான்-லீனியர் ஃபார்மட்டைத் திரைக்கதையில் திணித்துள்ளார். அது, படத்தோடு ஒன்றுவதற்குப் பெரும் தடையாக உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.