ஞாநி – சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!
எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.
நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். ‘என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?’ என நண்பர் ஒருவர் கேட்டார். என் கண்ல படலையே என திரும்பி பேப்பரை எடுத்துப் பார்த்தா, ‘WANTED: Scheduled Caste’ என இருந்தது. எப்பவும் போடுற பேஜில் போடாம.. கவனிக்கிறோமா எனப் பார்க்க இப்படி வேணும்னே போடுவாங்க. அப்ப மதுரையில் இருந்தேன். பாண்டி போக 60 ரூபா ஆகும். அரிசி கடைக்காரர் கிட்டதான் வாங்கிட்டு போனேன். இன்டர்வியூக்கு ஆறு ஏழு பேர் வந்திருந்தாங்க. அவங்களை எல்லாம் பார்த்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு.
‘மகாபாரத கர்ணனுக்கும், ராமாயண கும்பகர்ணனுக்கும் என்ன சம்பந்தம்?’
‘இருவரும் செய்நன்றி மறவா வள்ளல்கள்’னு சொன்னேன். கேள்வி கேட்டவர் ‘ஷாக்’காகி அப்படியே அசையாம என்னையே பார்த்துட்டிருந்தார். எனக்கு ஒன்பதாவதுல துணைப்பாட பகுதி – ‘செய்நன்றி மறவா வள்ளல்கள்’. அதுல முதல் பாடம் கர்ணன்; இரண்டாவது பாடம் கும்பகர்ணன். எப்ப படிச்சது எங்க வந்து உதவுது பாருங்க? அதான் மீண்டும் சொல்றேன். எஞ்சாய் பண்ணி கல்வியைப் படிக்கணும். அது எங்கயாவது எப்பவாவது உதவும். எனக்கு உதவின மாதிரி.
‘நாலடியார்ல இருந்து ஒரு பாட்டு சொல்லுங்க?’
“நெல்லுக்கு இறைத்த நீர்.. நல்லார் ஒருவர் உளேரேல் அவர் பொருட்டு, எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என சொன்னேன். ஆனா அது நாலடியார் பாடல் இல்ல. நாய் எலும்பு துண்டைத் தூக்கிப் போட மாட்டாங்களா என காத்திருப்பது போல் நான் வேலைக்காகக் காத்துட்டிருக்கேன். சரின்னு ஏதோ சொல்லி வச்சேன். வந்தா வேலை. இல்லன்னா என்னப் பண்ணிடுவாங்க?
ஆனா அவர் ‘வெர்ர்ரி குட்’னு சொன்னார். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆள் என்னையே முறைச்சுப் பார்த்தார். தமிழ் ஆசிரியராக இருப்பார் போல. முகத்துல சிரிப்பையே காணோம். அவர் முகமே ஒர் வைணவ முகமா இருந்தது.
இதே மாதிரி வரிசையா கேள்வி கேட்டாங்க. பதில் சொல்லிட்டு வந்தேன். ‘நான் சவேரியன்(!?)’னு சொன்னதும், ‘நானும் சவேரியன்’ தான்னு அவர் சொன்னார். அப்பாடி ஒன்னுக்குள் ஒன்னு ஆயிட்டோம். எப்படியும் வேலை எனக்குத்தான்னு தெரிஞ்சிடிச்சி. ஒரு சவேரியன் இன்னொரு சவேரியனைப் பார்த்தா கை குலுக்கிக்கணும். ஆனா இப்ப என்னால கை கொடுக்க முடியாதுன்னு, மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டேன். சர்ட்டிஃபிகேட்டைத் திருப்பிப் பார்த்தாங்க. ஆங்.. நல்ல மார்க் எடுத்திருக்கான் எனத் தெரிஞ்சது. கண்துடைப்பு இன்டர்வியூவா தான் இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா வேலை கிடைச்சிடுச்சு.
வாழ்க்கைல பெருசாலாம் ஒன்னும் கஷ்டப்படலை. நடுவுல ஒரு 2 வருஷம் வேலை இல்ல. ஆனா காலேஜ் முடிச்சவுடனேயே லேப் டெமன்ஸ்ட்ரேட்டரா நான் படிச்ச காலேஜ்லேயே வேலை கிடைச்சுது. அதுவும் நானா தேடிக்கல. அதுவா வந்துச்சு. நாடார் கிறிஸ்துவர்களும், ஃபர்னாண்டோ கிறீஸ்துவர்களுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அப்படியொரு சண்டை அப்ப நடந்தது. என்னை பெரிய ஃபாதர் கிட்ட கூட்டிட்டுப் போய், “I have appointed a harijan Christian” என ஒரு ஃபாதர் சொல்றார்.
உடனே பெரிய ஃபாதர், “குட்”னு சொல்றார்.
அடப்பாவிங்களா, கிறிஸ்ட்டியானிட்டில ஜாதியே இல்லைன்னு சொன்னீங்க? இரண்டு ஜாதி சண்டை போடாம இருக்க, ஒரு ஆப்பு மாதிரி, என்னை யூஸ் பண்ணி இருக்காங்க. அதுவும் ஏதோ அழிஞ்சு போன ஸ்பீஷிஸ் ஒன்ன கண்டுபிடிச்ச மாதிரி, பெரிய ஃபாதர் முன்னாடி நிக்க வச்சாங்க. இது என் தகுதிக்கோ, திறமைக்கோ கிடைச்ச வேலை இல்ல. அரசாங்கம் பண்ற மாதிரியே தான்.. ஃப்ரைவேட்லயும் பண்றாங்க. அங்க மேல் மட்டத்திற்குப் போகப் போக ஃபாதருங்க மத்தியில சாதி தீவிரமாகுதே தவிர குறையல. சாதி இல்லைங்கிறது எல்லாம் பெரிய பொய்.
கல்லூரியில் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கணித பாடம் தான் சோதனையாகக் கிடைத்தது. கொஞ்சம் நஞ்சம் இருந்த கடவுள் நம்பிக்கையும் அப்பவே போயிடுச்சு. இருந்தாலும் கன்னி மாதா முன்னாடி போய் நின்னு, ‘எனக்கு கணிதம் பிடிக்கவே இல்லை’ன்னு உருகிச் சொன்னேன். பாதிரியார் தான் சொல்லியிருக்கார்ல.. உருகி செபிச்சா கடவுளுக்கு கேட்கும்னு. என்னக் கொடுமை பாருங்க? நான் உருகிக் கேட்டது கடவுளுக்குக் கேட்டுச்சுன்னா தெரில.. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச zoology கிடைச்சது. Zoology-யை கதை புக் படிக்கிறாப்ல படிச்சேன். அவ்ளோ இன்ட்ரெஸ்ட். சின்ன வயசிலேயே காடு, மலைன்னு திரிவேன். வேட்டைக்கெல்லாம் போயிருக்கேன். அதுல இருந்து தான் இந்த இன்ட்ரெஸ்ட் வந்திருக்கும். ஹைமன்ஸ் என பெரிய பெரிய வால்யூம் புக் இருக்கும். எல்லாத்தையும் படிச்சேன். யாரும் சொல்லிக் கொடுக்கல. நான் மார்க்குக்காவும் படிக்கல. வாசிப்பைத் தவிர எந்த இன்பமுமாக இருந்தாலும் அது இன்ஸ்டன்ட் இன்பமாகத்தான் இருக்கும். வாசிப்பு மட்டுமே நிரந்திர நிம்மதியைத் தருவது.
எங்க பாட்டி சொல்லும், ‘டேய் நீ உங்க அப்பன மாதிரியே இருக்க’ன்னு. அவர் ஆறாம் கிளாஸ் ட்ராப்ட் அவுட். அப்புறம் ஊர்லாம் சுத்தி திரிஞ்சார். இந்த ஒரு விஷயத்திற்கு அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும். விலங்குங்க மேல ஆர்வம் வர அவர் ஜீன்தான் காரணமாகி இருக்கு.
என்னைப் பற்றிச் சொல்றதுக்குப் பெருசா ஒன்னுமில்லை. அந்த வயசுல என்னத் தெரியும்? சாதி பத்திலாம் அப்ப தெரியாது. விளையாட்டும், படிப்பும் தான் உலகமா இருந்துச்சு. ஆனா எல்லா பசங்கள போலவும் எனக்கும் ரெண்டு விஷயம் பிடிக்காம போச்சு. ஒன்னு கணிதம்; இன்னொன்னு அப்பா. அப்பா மிலிட்டரில இருந்தவர். டிஸ்சிப்ளினுங்கிற பேர்ல முதுகிலேயே போடுவாரு. அவருக்கு லீவ் கிடைச்சுதுன்னா எனக்கு சந்தோஷம் போயிடுச்சுன்னு அர்த்தம். திரும்பி ஊருக்குப் போறப்ப, அந்த ஒன்றரை வருட பிரிவைப் போக்க “25 பைசா” தந்துட்டுப் போவாரு.
நான் சின்னதா இருப்பேன். என்கூட படிக்கிறவங்க எல்லாம் என்னை விட உயரமா இருப்பாங்க. முதல் பென்ச்சில் தான் உட்கார்ந்து இருப்பேன். அவங்களாம் அடிக்கடி என்னை விட்டுட்டு குசுகுசுன்னு பேசிப்பாங்க. எனக்கு ‘அந்த’ விஷயங்கள் எல்லாம் தெரியாது. அவங்க என்னப் பேசிப்பாங்கன்னு புதிரா இருந்தது. அப்புறம் அதெல்லாம் எனக்கு ஃபாதர் தான் சொன்னார். சொல்லிட்டு அதெல்லாம் பாவம்னு சொன்னார். எது பாவம்? அதெல்லாம் பாவம். அதெல்லாம் பாவம்னு சொன்ன கிறிஸ்துவ மதத்தை அப்பவே விட்டேன்.
ஞாநி – சாதியை ஒழிக்க என்னப் பண்ணணும்?
சாதியை கண்டிப்பாக ஒழிக்கணும். ஆனா அது அவ்ளோ சுலபமா பண்ணிட முடியாது. பொருளாதார மாற்றத்தை conscious ஆக இருந்து கொண்டு வந்துடலாம். ஆனா சாதியற்ற சமூகத்தை அப்படிக் கொண்டு வந்துட முடியாது. அது இனக்குழு மனப்பான்மையில் இருந்து வேர் விட்டிருக்கு. கூர்மையான கத்தி போல இதுக்கு ரெண்டு எட்ஜ் இருக்கு. ஒன்னு கலெக்டிவ்வாக, கோ-ஆப்ரேடிவ்வாக வாழ உதவுது; இன்னொன்னு சாதியை வளர்க்க உதவுது. இந்தியாவில மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்துட்டேன். எல்லோரும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறாங்க. தனக்கு கீழ ஒரு ஜாதியாவது இருந்துட்டா போதும். தலித்துக்கு கீழ குறவன் இருக்கிறதுல, ‘நாம கடைசி இல்ல’ன்னு ஒரு திருப்தி.
இது தீர்க்கவே முடியாத ஒன்னுன்னுலாம் இல்ல. தீர்வு நம்மகிட்டயே இருக்கு. வெளிலலாம் இல்லை. கொஞ்சம் யோசிச்சா சாதி ஒன்னுக்கும் பிரயோஜனமில்லாத விஷயங்கிறது தோணும். அப்படித் தோண விடாம நமக்குள்ள இருக்கிற இனக்குழு மனப்பான்மை தடுக்குது. அது தொடர்ந்து கொம்பு சீவப்படுகிறது. அதைப் பற்றி நிறைய விவாதிக்கணும், விவாதித்தவர்கள் நான்கு பேரிடம் தொடர் விவாதங்களில் ஈடுபடணும். எப்படியாவது ஒழிச்சிடணும்.
நாள்: 02-12-2012
இடம்: ஞாநி வீடு
– தினேஷ் ராம்