Shadow

ரத்த சரித்திரம் விமர்சனம்

ரத்த சரித்திரம் விமர்சனம்

மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை.

எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு ‘ரத்த சரித்திரம்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.

ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர். வீரபத்ராவின் இளைய மகனான பிரதாப் ரவி தன் தந்தையின் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்கிறார். அந்நேரம் பார்த்து ஆனந்தபுர தொகுதியில் காலூன்ற நினைக்கும் பிரபல நடிகரான சிவாஜி ராவ் தனது கட்சியில் பிரதாப் ரவியை இணைக்கிறார். அரசியலில் இணைந்ததும் பிரதாப் ரவி தனது ஆதரவாளர்களிடம் ‘ஓர் அதிரடி குழு’வை அமைத்து எவரால் எல்லாம் தனக்கு எதிரிகள் என பட்டியல் தயாரித்து அனைவரையும் கொல்லச் சொல்கிறார். எவராலும் அசைக்க முடியாத மாபெரும் விருட்சமாக பிரதாப் ரவி அரசியலில் வேரூன்றிய சூழ்நிலையில் சூர்யா என்பவன் தோன்றி பிரதாப் ரவியைக் கொல்லப் பார்க்கிறான். முதலில் தந்தை நரசிம்ம தேவரையும், பின் அதிரடி குழுவால் தன் தாய், தங்கை மற்றும் தங்கையை இழக்கும் சூர்யா காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான். சிறைக்குள் சென்றும் பழி வாங்கும் வெறி குறையாத சூர்யா, தலைமைப் பதவியில் இருந்து விலக முடியாமல் சமரசங்கள் செய்து கொள்ளும் பிரதாப் ரவி என இருவரில் எவர் அடுத்தவரை முந்தி உயிர் தப்புகின்றனர் என்ற கேள்விக்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

பிரதாப் ரவியாக விவேக் ஓப்ராய். ஐஸ்வர்யா ராயுடன் காதல், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட உதவி செய்தவர் என்று மட்டுமே பெரும்பாலும் தமிழகத்தில் அறியப்பட்ட இவரின் முதல் தமிழ்ப்படப் பிரவேசம். எனினும் பிறமொழி படத்திற்குக் குரல் கொடுத்தது போல் தான் படம் உள்ளது. விவேக் ஓப்ராய் தனது பெரிய கண்களை அகல விரிக்கும் பொழுது அதிகமாகும் விழியின் கூர்மையும், வில்லாய் வளையும் புருவமும் அவரது பாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. பழி வாங்கக் கத்தி எடுக்கும் பொழுதும், அரசியலிற்கு வந்த பின் நெற்றியில் பெரிய திலகமிட்டுக் கையெடுத்துக் கும்பிடும் பொழுதும் பாத்திரத்தின் மிடுக்கும், கம்பீரமும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். விவேக் ஓப்ராயாகத் திரையில் தோன்றி பிரதாப் ரவி என்னும் பாத்திரமாக மாறிவிடுகிறார்.

சூர்யா. அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயரும் அதுவே! இரண்டு பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ் ரத்த சரித்தரித்தின் நாயகன். கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் இரையைத் தப்ப விட்ட கவலை; முரட்டுத்தனமான உடல்மொழி; பார்வையில் வன்மம்; பழி தீர்த்தே ஆகவேண்டும் என்று முகத்தில் குடிக் கொண்ட வெறி என்று நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளார். எனினும் ப்ளாஷ்- பேக்கில் ப்ரியாமணியுடன் தோன்றும் ஆரம்பக் காட்சிகளில் மட்டும் அவரது பழைய படங்களை நினைவுப்படுத்துகிறார்.

ராதிகா ஆப்தே. பிரதாப் ரவி மனைவி நந்தினியாக நடித்துள்ளார். ப்ரியாமணி சூர்யாவின் காதல் மனைவியாக தோன்றுகிறார். சுதீப். கன்னட நடிகர். டி.சி.பி. மோகன் பிரசாத்தாக நடித்துள்ளார். சூர்யாவைக் கைது செய்யும் பொழுதும், பிரதாப் ரவியின் இடத்திற்கே சென்று அவரது ஆட்களை அதட்டும் பொழுதும் கவனிக்க வைக்கிறார். சத்ருஹன் சின்ஹா. அதிக அலட்டலின்றி ஆவலிப்புடன் அவர் பார்க்கும் பார்வையும், அவரது இலங்கும் உடை மற்றும் உடல்மொழியும் அவரைப் பார்த்ததும் சிரத்தவனாக நம்ப செய்கிறது.

ராம் கோபால் வர்மா. முன்பே அவரது சில படங்கள் தமிழில் குரல் கொடுக்கப்பட்டும், மறு உருவாக்கம் செய்து வெளி வந்திருந்தாலும் இதுவே அவரது இயக்கத்தில் நேரடியாகத் தமிழில் வெளி வந்திருக்கும் படம். வன்முறையையும் ஓர் அழகியலோடு அளித்துள்ளார். அமோல் ரத்தோடின் ஒளிப்பதிவில் படம் முரட்டுக் கவிதை போல் கரகரக்கிறது. படத்தில் வரும் மங்கலான ஒளி, பாத்திரங்களின் மன இருமையைப் பிரதிபலிக்கிறது. அதனால் வன்முறையின் அப்பட்டமான அருவருப்பு பெரிதாய்த் தெரியவில்லை. தரண் – சந்தீப்பின் ஒலிப்பதிவு திரைப்படத்தின் மன நிலைமையோடு பொருத்துகிறது. ஸ்லோ- மோஷன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும் அடிக்கடி வருவதால் படத்தின் விறுவிறுப்புத் தன்மையைக் குறைத்து விடுகிறது. படத்தின் முடிவை ஊகிக்க முடிவதாக இருப்பதும் ஒரு குறையாக உள்ளது. சில இடங்களில் வரும் கூர்மையான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

ரத்த சரித்திரம் – தொடர் பழி வாங்குதலின் அவல சித்திரம்.