32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

Dinesh R சேலம் Published: 28/11/2025 2 நிமிட வாசிப்பு Updated: 29/11/2025 சினிமா
எழுத்து அளவு:

டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை பொறுக்க முடியாமல், அவரைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். பூட்டப்பட்ட குளியலறையில் இருந்து ரெடின் கிங்ஸ்லி வெளியேறுவது ரசிக்க வைக்கிறது. ப்ரோக்கர் லல்லுவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாடுலேஷன் அவரேற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. கொடூரமான சைக்கோ டிராகுலா பாபி பாத்திரத்திற்குச் சுனில் பொருந்திப் போகிறார். ஜான் விஜயின் வில்லனிசம் அவரது வழக்கமான மேனரிசத்திலேயே இருப்பதால் பெரிதாக ஈர்க்கவில்லை. டிராகுலா பாண்டியனாக வரும் சூப்பர் சுப்பராயன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. ‘X, Y. Z என எத்தனை பேர்டா ஃபோன் பண்ணுவீங்க?’ என அலுத்துக் கொள்ளும் போது ரசிக்க வைக்கிறார் அஜய் கோஷ்.

தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ரீட்டாவாகக் கீர்த்தி சுரேஷ் சோலோ நாயகியாகத் தோன்றியுள்ளார். அவரது தங்கையாக நடித்துள்ள அக்ஷதா அஜித்தும், அக்காவாக நடித்துள்ள காயத்ரி ஷானும், கீர்த்தி சுரேஷின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை நீர்த்துப் போகச் செய்யுமளவு சிறப்பாக நடித்துள்ளனர். இவர்கள் மூவரையும், தன் அனுபவத்தால் ஓவர்-டேக் செய்து, அப்பாவியான அம்மாவாக அசால்ட் செய்துள்ளார் ராதிகா சரத்குமார்.

ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவுணர்வில்லாமல் கொல்வதையும், பிறர் இறப்பதைச் சகஜமாகப் பார்ப்பதையும், டார்க் காமெடி என்ற பெயரில் சொல்லியுள்ளார் இயக்குநர் JK. சந்துரு. கையைக் கூப்பியவண்ணம் இறைஞ்சும் பாபநாசத்து சுயம்புலிங்கம் கண் வந்து போகிறார். கர்மா ஒரு பூமரங் எனப் படத்தின் தொடக்கத்தில் வரும் வசனத்தை லாகவமாகப் படத்தின் இறுதியில் கொண்டு வந்து முடித்துவிடுகிறார். நிறைய கதாபாத்திரங்களைச் சிக்கலில்லாமல் திரைக்கதைக்குள் கொண்டு வந்து, படத்தின் சுவாரசியத்தை முடிந்தவரை தக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர். 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.