
சமூகத்துக்கு நல்லது செய், எவருக்கும் தீங்கைச் செய்யாதே என தலைப்பிலேயே பாடம் எடுத்துள்ளார் எழுதி இயக்கியுள்ள டாக்டர் S. ராஜா.
மதுரை மருத்துவமனையில் டீனாக (Dean) இருக்கும் டாக்டர் சந்திரபோஸ், மிக நேர்மையானவர். சேவை நோக்கோடு பணி புரியும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அதிகமாக உள்ளது. வீட்டில் மகளுடன் ஜாலியாகவும் அன்பாகவும் பழகும் பாசக்காரரான அவர், மருத்துவமனையில் நோய் பற்றியும், மருந்துகள் குறித்தும் பொறுமையாக நோயாளிகளுக்கும் ஆடியன்ஸ்க்கும் விளக்குகிறார். அவரது நேர்மையால் வருமான இழப்பைச் சந்திக்கும் டாக்டராம அவரது மனைவியே, மேலிடத்துக்கு யோசனை கொடுத்து அவரை சென்னை ஃபாரன்சிக் துறைக்குத் தலைவராக ட்ரான்ஸ்ஃபர் பெறக் காரணமாகிறார். இளம் வயதினர்க்கு ஏற்படும் திடீர் ஹார்ட் அட்டாக் பற்றி விசாரிக்கத் தொடங்கி, ஒரு பெரும் மருத்துவ ஸ்கேமை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் படத்தின் முடிவு.
H.ராஜா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிறார். அவரது நாற்காலியின் வலதுபுறம் விவேகானந்தரும், மறுபுறம் காந்தியும் பதாகைகளில் நிற்கின்றனர். போதையில்லாத் தமிழகத்தை உருவாக்க அதிரடி நடவடிக்கைகள் எடுப்பவராக வசனங்களை மிகப் பிரக்ஞையுடன் பேசுகிறார்.
டாக்டர் சந்திரபோஸின் மகன் டாக்டர் விஜயாக நடித்துள்ளார் குரு விஜய். “மை ஸ்டைல் இஸ் டூ பிரேக் தி ரூல்ஸ்” என்ற வசனத்தை பன்ச் டயலாக்காகத் தேவைக்கு அதிகமாகவே சொல்லியவண்ணம் உள்ளார். தேவையை உண்டாக்கி, மருந்துகளை அரசுக்கு விற்பதற்குப் பின்னுள்ள மூளையாகச் செயற்படுகிறார். எட்டுக் கோடி என நிர்ணயிக்கப்படும் மருந்துகளின் விலை, அமைச்சர், சீஃப் செகரட்டரி என ஒவ்வொரிடமும் பில் (bill) பாஸாகும் போது, அவர்கள் கமிஷன் தொகை பேசி விலையை உயர்த்தி பதினெட்டுக் கோடியாக கடைசியில் மாறுகிறது.
ஐம்பது ரூபாயில் சரியாக வேண்டிய தொண்டை வலிக்கு ஐம்பதாயிரம் செலவாகும் என சாமானியனை மிரட்டுகிறது தனியார் மருத்துவமனை. ஒரு கோடி கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கியவர்களைப் பரீட்சையில் பாஸாக்கி விட 15 லட்சம் என தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இப்படியாக முதல் பாதி முழுவதும் மருத்துவ மாஃபியாவைத் தோலுரித்துள்ளார் இயக்குநர்.
இரண்டாம் பாதியில், ஆரோக்கியப் பித்து கொண்டு அலையும் இளைஞர்களைக் குறி வைத்து சந்தைப்படுத்தப்படும், Whey ப்ரோட்டீன் பவுடரில் எத்தகைய மோசடி நடக்கிறது என்பதைப் படம் அலசுகிறது.
மினிமம் பட்ஜெட் படம் என்பதற்கான அறிகுறிகள், காட்சிகளில் அதிகம் தென்பட்டவண்ணம் உள்ளன. மருத்துவக் கல்லூரி நூலகத்தில், குரு விஜயின் நண்பன், ‘எழுந்திரு விழித்திரு’ என்ற விவேகானந்தரின் புத்தகத்தைப் படிக்கிறார். ஆனால் அவர் வகுப்புக்கே ஒழுங்காக வராதவர் என கிண்டல் செய்யப்படுகிறார். இன்னொரு காட்சியில், “என் பொண்ணுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. நாங்க வெளியில் கூடப் போயச் சாப்பிடமாட்டோம். ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வீட்டுலயேதான் சாப்பிடுவோம்’ என சீரியஸ் டயலாக்கின் இடையில் சிரிக்க வைத்துவிடுகின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளார் டாக்டர் S.ராஜா. சிரித்த முகமாக அனைவரிடமும் பழகும் அவரது முகத்தில் ஒரு கனிவு குடி கொண்டுள்ளது. தொழில் சார்ந்த ஞானத்தைப் படத்தில் கடத்தும் அவரது ஆர்வம் எல்லாக் காட்சியிலும் பளீச்சிடுகிறது. அதனால் படத்தில் ஒரு சீரிய ஓட்டமில்லாமல், கோர்வையற்ற காட்சிகளால் அடுக்கப்பட்டுள்ளன. மகனின் காதல், அவனது அறமற்ற லாப நோக்கம் கொண்ட வணிகச் செயற்பாடு என இடையிடையில் சந்திரபோஸின் நேர்மைக்கு நேர்மாறாய் ஓர் அடுக்கும் படத்தில் உள்ளது.
போதைப் பொருள் புழக்கத்திற்கு யார் காரணமென்ற கேள்விக்குள் போகாமல் படத்தைச் சடாரென முடித்துள்ளனர். மூடிப் புதைக்கப்படும் உண்மை என்ன என்பதை பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகின்றனர்.
