32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பனி விழும் இரவு விமர்சனம் | Pani Vizhum Iravu review

Dinesh R சேலம் Published: 30/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 31/10/2026 சினிமா
எழுத்து அளவு:

கவித்துவமான தலைப்பு, காதலர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும் அந்நியோன்யத்தையும் குறியீடாகச் சுட்டுவதோடு, கதை நிகழும் நிலவியலையும் நேரடியாகச் சுட்டுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கல்யாணத்திற்கும் முன் கொடைக்கானலுக்கு ஃபோட்டோ-ஷூட் எடுக்கச் செல்கின்றனர் ஜே.கே.வும், சபிதாவும். சில அமானுஷ்யமான சமிக்ஞைகளை ஜே.கே. கவனித்தாலும், அவற்றைப் பொருத்திப் பார்த்துச் சுதாரிப்பதற்கு முன் சபிதா காணாமல் போகிறார். காவல் நிலையத்தில் புகாரளிக்க, காவல்துறையினர் சபிதாவைத் தேடத் தொடங்குகின்றனர். சபிதாவிற்கு என்னானது, காவல்துறையினர் சபிதாவை மீட்டார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.

முதற்பாதி காதலிலும், இரண்டாம் பாதி தேடலிலும் பயணிக்கிறது. காவல்துறை ஆய்வாளராக மதிமாறனாகச் சேரன் ராஜ் வந்தாலும், சபிதாவைத் தேடி உண்மையைக் கண்டுபிடிப்பது அவருக்குக் கீழ் பணிபுரியும் நாகராஜே! அப்பாத்திரத்தில் கருப்பு நம்பியார் நிறைவாக நடித்துள்ளார். “AI என்றால் என்ன?” என சேரன் ராஜின் கேள்விக்கும் கருப்பு நம்பியார் தான் விளக்கிச் சொல்கிறார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதியைச் சுமக்குமளவு முக்கியமான பாத்திரத்தைக் கருப்பு நம்பியாருக்கு வழங்கியுள்ளார் இயக்குநர் செ.ரா.ராஜேஷ்.

சபிதாவாக எனாக்‌ஷி கங்குலி நடித்துள்ளார். ‘என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும், அநாவசியமாக மற்றவரை ஹர்ட் பண்ணாதே!’ எனக் கோபித்துக் கொள்ளும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். நாயகியைப் பாதுகாப்பது தன் கடமை என நினைத்துக் கொள்ளும் நாயகன் கோபித்துக் கொள்கிறான். ஜே.கே.வாக நடித்துள்ள அருண் கார்த்தி உணர்வுகளை நன்றாக முகத்தில் கொண்டு வந்துள்ளார்.

‘இதுவரை சொல்லப்படாத கதை; இதுவே உலகத்தில் முதல் முறை’ என போஸ்டரில் விளம்பரப்படுத்தும் அளவிற்கு, க்ளைமேக்ஸில் அவிழும் மர்மத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளது படக்குழு. அமானுஷ்யமாகத் தொடங்கி, மிஸ்ட்ரி த்ரில்லராகப் பயணித்து, ஒரு சைக்காலஜிக்கல் டிராமாவாகப் படம் முடிகிறது. சின்ன பட்ஜெட் படம் என்றாலும் ஸ்டேஜிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கழுத்தின் முன் பக்கம் அடிப்பட்டுள்ள நாயகியை யாரோ இழுத்துச் செல்கின்றனர்; இரத்தத் தடயமோ தலையில் அடிப்பட்டவரை இழுத்துச் செல்லும்பொழுது ஏற்படும் தடயம் போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு உதாரணம், காவலராக வரும் சேரன் ராஜை நாயகன் எளிதாக வீழ்த்தும் காட்சியைச் சொல்லலாம். இத்தகைய சின்னச் சின்ன குறைகள், அடுத்து என்னாகும் என்ற ஆர்வத்தையோ, நாயகிக்கு என்னானது என்ற பதற்றத்தையோ ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகி வரும் நிச்சயமற்ற எதிர்காலத்தைப் படம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது நன்று.

 

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.