பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.
“இயக்குநர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரைத் திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குநராக வருவார்” என்றார் நடிகர் மன்சூர் அலிகான்.
“வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குநரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்துத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜீ.வி. 12 படம் நடிப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஜீ.வி.யுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன்” என்றார் இயக்குநர் பாண்டிராஜ். கார்த்தி நடிக்க, தான் தயாரிக்கும் அடுத்த படத்தைப் பாண்டிராஜ் இயக்குவார் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டு , “செம” படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன்.
இந்தப் படத்தின் விசேஷம் என்னவென்றால், முதல்முறையாகக் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ரசிக்கக் கூடிய ஜீ.வி. படமாக இது இருக்குமாம். மேளும், ஜீ.வி.பிரகாஷுடனான யோகி பாபுவின் காட்சிகள் பிரமாதமாய் வந்துள்ளதாகவும், அவர்களின் கெமிஸ்ட்ரி படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளதாம். ஜனா என்னும் வில்லனை அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் வள்ளிகாந்த்.