ரங்கூன் என்ற தலைப்பு இப்படத்திற்குப் பொருத்தமானதா என்பதே ஐயம்தான். ரங்கூன் என்ற நகரம் படத்தின் கதைக்குப் பெரிதும் உதவாததோடு, சில நிமிடங்களே படத்தில் வந்து போகிறது. நாயகனின் சொந்த கிராமம் கூட ரங்கூனில் இருந்து 90 கி.மீ.இலுள்ள ‘டேடயே’ என்றே காட்சிப்படுத்தியுள்ளனர்.
பர்மாவிலிருந்து சிறு வயதிலேயே அகதியாகச் சென்னைக்கு வரும் கெளதம் கார்த்திக்கிற்கு வாழ்க்கை அளிக்கும் படிப்பிணை தான் படத்தின் கதை.
கெளதம் கார்த்திக்கின் நண்பர் ‘அத்தோ’ குமாராக லல்லு கலக்கியுள்ளார். அவர் வடச்சென்னைத் தமிழில் வெகு சரளமாய்ப் பேசி ரசிக்க வைக்கிறார். வெங்கட் என்கிற வெங்கடேசனாக வருன் கெளதம் கார்த்திக்கைக் கூட வடச்சென்னைக்காரராக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கெளதமை முழுவதுமாக மாற்றியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதுவரையிலுமான கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படங்களிலேயே, இப்படம்தான் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் உழைப்பிற்கு இதுவே சான்று.
‘ஃப்ரெண்டு; லவ் ஃபெயிலியர்; ஃபீலாய்ட்டாப்ல’ என்ற ஒரே வசனத்தின் மூலம் பிரபலமான டேனியல், இப்படத்தில் டிப்டாப்பாக வருகிறார். டிப்டாப், அத்தோ குமார், வெங்கட் ஆகிய மூவரின் நட்பைப் பிராதனமாகக் கொண்டே படம் சென்னையிலிருந்து ரங்கூனுக்கும், ரங்கூனிலிருந்து சென்னைக்குமெனச் சலிப்படைய வைக்காமல் பயணிக்கிறது. டிப்டாப்பின் கேரக்டர் ஸ்கெட்ச்சை நன்றாக வடிவமைத்துள்ளார் இயக்குநர்.
நடாஷா எனும் பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் சனா. அவர் சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழும் குழி அழகாக உள்ளது. ஆடுகளம் டாப்சி பாத்திரத்தில் இருந்து இன்ஸ்பையராகி இருப்பார் போல் இயக்குநர். வழக்கம் போல், காதலிக்கவும் காதலிக்கப்படவும் என்பதோடு கதாநாயகி பாத்திரம் தன் முக்கியத்துவத்தைப் பதியவில்லை. சியா என்கிற குணசீலனாக நடித்துள்ள சித்திக் மனதில் பதியுமாறு நிறைவாக நடித்துள்ளார்.
கடத்தல் எபிசோட் படத்தின் போக்கைத் திசை திருப்பி விடுகிறது. படத்தின் கதையே, இடைவேளையில் தான் தொடங்குகிறது. அது தொடங்கிய வேகத்திலேயே அமிழ்ந்து வேற திசைக்குப் போவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் நோக்கிச் செல்லச் செல்ல, திரைக்கதையில் ஓர் அவசரம் வருவதோடு, ‘நான் ஏன் அப்படிச் செய்தேன் என்றால்..’ என நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் வசனமாகக் கதை விளிக்கப்படுகிறது.