சுபமாய் அல்ல, பரம சுபமாய் முடிகிறது சேவல்களம் நாவல். அந்நிறைவைப் புறந்தள்ளி, மனம் குறையைத் தேடத் துவங்கி விடுகிறது. அகத்தின் நிலைகுலைவு, வாழ்வு தரும் ரணம் என கண் மூடி அனுபவிக்க நாவலில் ஏதுமில்லாமல் போவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வெறுப்போ, கசப்போ, வன்முறைச் செய்கையோ மனித மனதிற்குத் தேவைப்படுகிறது. ‘சமூகக் கட்டுப்பாடுகளாலும், நாகரீகத்தினாலும் தற்காத்துக் கொள்ளும் மனித மனம், தனது ஆழ்மன வன்முறை உணர்ச்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்களைத் தேடிக் கொள்ளும்’ என்கிறது உளவியல். இதையே தான் காலந்தொட்டு செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. இதை, எழுத்தாளர் சுஜாதா தன் பாணியில், “நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்துவிடும்” எனச் சொல்லியுள்ளார். அதுவும் இன்றைய நேரடி விவாதக்களக் காலத்தில், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையைப் பரப்புவது என்பது முற்றிய நிலையில் இருக்கிறது. அதன் வெளிப்பாடாக மக்களே நேரடியாகக் களமிறங்கி, வாட்ஸ்-அப்பில் புரளிகளையும், பீதிகளையும், உங்களுக்கு மோட்சமே இல்லையென்கிற பதற்றத்தையும் பரப்பத் தொடங்கிவிட்டனர்.
அத்தகைய அவநம்பிக்கையைச் சுமந்தவாறு, பெருமாள்முருகன் மிக நாசூக்காக, பின்னட்டை வாசகத்தில், ‘நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது’ என இடித்துரைக்கிறார். முன்னுரையிலோ, ‘மனிதர்களைப் பற்றிய அவநம்பிக்கை மிகுந்து வரும் சூழலில் நல்ல குணங்கள் இயல்பாக மனிதர்களிடம் படிந்திருக்கின்றன என்பதைக் காணும்போது பெரும் ஆசுவாசமாக இருக்கிறது’ என எழுதியுள்ளார். ‘நல்லவர்’ என்பதை ஒற்றை மேற்கோள்குறியில் அழுத்திக் குறிப்பிட்டு ஆசுவாசம் தான் அடைய முடிகிறதே தவிர, பெருமாள்முருகனால் மகிழ முடியவில்லை. அவநம்பிக்கை அப்படி நம்மிடையே கரை புரண்டோடுகிறது.
இதற்கே, நாவலின் அத்தனைப் பாத்திரங்களும் நல்லவர்கள் இல்லை. பெருமாள்முருகன் குறிப்பிடுவது போல் பெரும்பான்மை பாத்திரங்கள் மட்டுமே அப்படி உள்ளார்கள். ஆனால், அந்தப் பெரும்பான்மையான பாத்திரங்கள் அனைவரும் சேவல்களத்தோடு தொடர்புடையவர்கள். சேவற்களத்தின் சிறப்பே மனிதர்களை ராஜபோதையில் ஆழ்த்தி, மனிதர்களின் ஒழுக்கநெறியை மேம்படுத்துவதே! அது எப்படிச் சாத்தியம் என்பதைக் ‘களம் 20’-இல் வரும் புதுக்கோட்டை டோர்ணமென்ட் பற்றிய அத்தியாயத்தில் விவரித்துள்ளார் பாலகுமார் விஜயராமன்.
நாவலின் ஒரு வரியில், ‘சினிமாவில் காட்டுவது போல, தோல்வியடைந்தால், மோசமான சேவல் என்று அங்கேயே கழுத்தறுத்துவிட்டுப் போவதெல்லாம் நிஜத்தில் கிடையாது’ என்கிறார் பாலகுமார். மேலும், தோல்வியடைந்த சேவலின் போர்க்குண பெருமையைத்தான் கதாபாத்திரங்களின் வாயிலாக வியந்தோதுகிறார் பாலகுமார். சேவல் வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் சேவல்களுடன் மட்டும் அன்னியோன்னியத்தையும், பாசப்பிணைப்பையும் வெளிப்படுத்துவதில்லை, அத்தனை சண்டைச்சேவல்கள் மீதும் வாஞ்சையாக உள்ளனர். தனது இருபதின் மத்தியில் சேவற்களத்தைத் தரிசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு, சேவற்சண்டை குறித்த தரவுகளைப் பத்தாண்டுகள் தேடிச் சேகரித்த பாலகுமாருக்கு, அக்களத்தின் மாந்தர்கள் அனைவரும் நல்லவர்களாக மட்டும் தெரிந்திருப்பதில் எந்த ஆச்சரியமோ மிகையோ இல்லை என்றே படுகிறது. கலையின் வேலை மனதைச் செம்மைப்படுத்துவது; சங்ககாலம் தொட்டே தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கும் சேவற்சண்டையில் ஈடுபடுவோரின் மனம் செம்மைப்படாதா?
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்கிறார் வள்ளுவர். நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்குமாம். ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கோரும் சேவற்களத்தில் அனைவரும் நல்லவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம் (ஆகவே, யாரேனும், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தில், நாவலைத் திறந்தாலே, ‘லாலாலா லல்ல லாலே’ என விக்ரமன் படப் பின்னணி இசை கேட்கிறது எனப் போகிற போக்கில் சொல்லும் கருத்தினைச் சட்டை செய்யாதீர்கள்!)
ரமேஷ் எனும் கதாபாத்திரம் வரும் ஓர் அத்தியாயத்தைப் பற்றி, ‘பொதுவெளிக்குள் ஒருவர் நுழைவதைப் பற்றிய எதிர்மறைச் சித்திரமாக அது தேங்கிப் போகிறது’ எனக் கூறுகிறார் பெருமாள்முருகன். பொதுவெளி என்பது வீதிக்கு இறங்கிப் போராடுவது மட்டுமில்லை. சேவற்களம் என்பதே ஒரு சமதர்ம பொதுவெளி தான்; அங்கே மன்னரும் ஒன்றே, அவரை எதிர்த்து சேவலைச் சண்டைக்கு விடும் சாமானியரும் ஒன்றே! அக்களத்தில் எந்தச் சிக்கலும் எழுவதில்லை. சித்தாந்தத்தால் கவரப்படும் இளம் மனதின் அதீத ஈடுபாடும் உற்சாகமும் தான் ஆபத்தானது. நொடியில் முடிவெடுத்து, அதற்காகத் தன்னையே மாய்த்துக் கொள்ளும் முதிர்வற்ற போக்கு கண்டிக்கப்படவேண்டியது. ஆனால், இங்கே நம் சமூகத்தில் அது போராட்ட வடிவமாகக் கொண்டாடப்படுகிறது. என்ன கொடூரமான சமூகம் இது!! அதைப் பற்றிப் பேச பலர் தயங்கும் சூழலில், பாலகுமார் அதைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனினும், கொக்கு மீனை தன் அளகால் குத்தி உண்ணும் பொழுது, மீனுக்காகப் பரிதாபப்படாமலும், கொக்கின் பசி ஆறியதென பரவசப்படாமலும், வெறுமனே சாட்சியாக இருந்து ரமேஷின் அத்தியாயத்தைக் கடந்துள்ளார் பாலகுமார்.
எல்லாப் பொறுப்புகளையும் சுமக்கும் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம், அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்களே அறிவார்கள். ஆனால், நாவலில் ரமேஷின் மரணம் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஆரம்ப அத்தியாங்களில் ரமேஷைச் சட்டெனக் கடந்து விடுவதாலும், நாவல் முடிக்கும் பொழுது அதைப் பாரமாகச் சுமக்க வேண்டிய அவசியம் பார்வையாளர்களுக்கு ஏற்படாமல் போகிறது. ஆனால், தன் அண்ணனின் மரணத்தை ஒரு வடுவாகச் சுமந்து வரும் சேதுபதியின் அத்தியாயங்களில் அந்த துர்மரணத்தின் சாயல் படிந்தே உள்ளது. கதாபாத்திரங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்த பாலகுமார், சேதுபதியின் வடுவிற்கும் ஒரு களிம்பினைத் தடவி, அம்போவென விட்டுவிட்ட ரமேஷ் அத்தியாயத்தால் ஏற்படும் எதிர்மறைச் சித்திரத்தைப் போக்கியிருக்கலாம்.
நாவலில் மொத்தம் 26 அத்தியாயங்கள். அதில் 9 அத்தியாயங்கள் மட்டுமே சேவல், சேவல் வளர்ப்பு, சேவற்களம், சேவற்களத்தின் ஒழுக்கநெறிகள், சேவற்கட்டிகள், சேவல் பராமரிப்பு ஆகியவைப் பற்றின. அதில் மூன்று அத்தியாயங்களில் விறுவிறுப்பான சேவற்சண்டை பற்றிய அற்புதமான விவரணைகள் வருகின்றன. அதற்குப் பொருந்தும்வண்ணம் அருமையாக உள்ளது சிவராஜ் பாரதியின் அட்டை வடிவமைப்பு. சேவல்களின் களம் என்பதால் பிரதான பாத்திரங்கள் அனைவரும் ஆண்கள். நாவலின் மையப் பாத்திரமான இராமரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. அவரது மகன்கள் கண்ணன், ஜீவா குறித்தும்; அவரது தங்கையின் மகன் சேதுபதி குறித்தும்; சேவற்சண்டையில் ஈடுபட நினைக்கும் குமார் பற்றியும் மற்ற அத்தியாங்களில் வருகின்றன. இதில் கண்ணனையும் குமாரையும் போல் சேதுவும் ஜீவாவும் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. ஜீவா செய்வது அனைத்துமே ‘மிஷன் இம்பாசிபிள்’ வகை கணினிக் குற்றங்கள். ஆனாலும், மதுரைக்காரராக இருப்பதால் மண் மனம் மாறாமல் பாசக்காரராய் இருக்கிறார் (அரிவாள் என்ற சொல் நாவலில் இல்லை). முன்னும் பின்னுமாக நான்-லீனியர் பாணியில் அத்தியாயங்கள் இருந்தாலும், கதையைப் புரிந்து கொள்வதற்கு அது தடையாக இல்லை. 26 வது அத்தியாயத்தில் அனைத்தும் சுபமாக முடிவதைக் கூடப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் கடைசிப் பக்கத்தில், நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத இரு நபரை ஜோடி சேர்க்கும் பாலகுமாரின் அந்த மனசு இருக்கே..
பொதுவாகக் காவியங்கள் எனக் கொண்டாடப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் சோகக்கீதங்களாகவே உள்ளன. மகிழ்ச்சியான முடிவோடு இலக்கியம் இருக்கக்கூடாதா? தமிழின், செய்யுள் வடிவ ஆதி இலக்கியங்கள் எல்லாம் ‘இன்பியல் இலக்கியம்’ ஆகவே இருந்துள்ளன. இசங்களின் வருகைக்குப் பின்னே அவை மனிதனின் வேதனை மட்டுமே நோக்கம் எனச் சுருங்கிவிட்டன. எழுத்தாளர்கள் இனி, பாலகுமாரைப் போல Hakuna Matata-விலும் கவனத்தைச் செலுத்தலாம்.
(பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர்: பாலகுமார் விஜயராமன்
விலை: 225/- )
– தினேஷ் ராம்