Shadow

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

Charlie-Chaplin-2-movie-review

ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும்.

முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அதே எனர்ஜியோடு, ஒன்றுக்கு இரண்டு நாயகிகளோடு துள்ளலாக நடனமாடுகிறார்.

இன்றைய தேதியில், எல்லாப் பிரச்சனைக்குமான ஊற்றுக்கண்ணாக இருப்பது வாட்ஸ்-அப் தான். படத்தின் தலைப்பிலேயே, அதை உணர்த்தும் வகையில் இரண்டு டிக்குகளை வைத்துள்ளனர். ஒரு சந்தேகம் எழ, அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பொறுமை இல்லாமல், சாரவையும் அவள் குடும்பத்தையும் திட்டிக் வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ அனுப்பிவிடுகிறான் திரு. அந்த வீடியோவிற்கு, சாரா பார்த்ததாக இரண்டு டிக் வரக்கூடாது என திரு படும்பாடு தான் படத்தின் கதை.

சாராவாக நிக்கி கல்ராணியும், ஆதாசர்மாவும் நடித்துள்ளனர். அதாவது Sara என்பது படத்தின் கதாநாயகியான நிக்கி கல்ராணி, Saaraa என்பது சைக்காலஜி மாணவியாக மின்னி மறையும் ஆதாசர்மா. படத்தில், நகைச்சுவையை விட கமர்ஷியல் அம்சங்கள் கூடுதல். முக்கியமாக பாடல்கள். இசையமைப்பாளரின் அம்ரீஷின் ஆல்பத்தில் பெரும் ஹிட்டடித்த ‘சின்ன மச்சான்’ பாடல் படத்தின் இரண்டாம் பாதியில்தான் வருகிறது. வேஷ்டியை மடிச்சுக் கட்டி நிக்கி கல்ராணி ஆட, திடீரென திரையரங்கு கொண்டாட்டக்களமாக மாறுகிறது. நாயகிகள் இரண்டு ஆனால், ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் என்ற கமர்ஷியல் ஃபார்முலாவைப் பிரயோகித்து, ஆதாசர்மாவிற்கும் கோட்டா ஒதுக்கி, ‘ஐ வான்ட் டூ மேரி யூ மாமா’ என்றொரு பாடலால் தெறிக்க விட்டுள்ளனர்.

பிரபுதேவாவிடம் அடி வாங்க தேவ்கில், சமீர் கோச்சார் என படத்தில் இரண்டு வில்லன்கள். வில்லன்கள் தான் என்றாலும் அடிவாங்க மட்டுமே. பிரபுதேவா போதையில் செய்யும் முட்டாள்த்தனமான செயல் தான் அவருக்கு வில்லனாக அமைகிறது. ஆனால், கனல் கண்ணனின் ஸ்டன்ட் கோரியோஃகிராபியில் சண்டைக்காட்சிகள் அதிரடியாக உள்ளன.

படத்தின் கலகலப்பிற்கு உதவி புரிபவர் விவேக் பிரசன்னா தான். க்ளைமேக்ஸ் வரையிலுமே அவரது அக்கப்போர் தொடர்கிறது. நிக்கி கல்ராணியிடம் பிரபுதேவாவைக் கோர்த்து விடுவதோடு மட்டுமில்லாமல் ஆதாசர்மாவிடமும் தரமாகக் கோர்த்து விடுகிறார். துபாய் ராஜா என்ற கதாபாத்திரத்தில் அவர் வந்தாலே ஒரு கலகலப்பு தொற்றிக் கொள்கிறது. சிற்சில காட்சிகளுக்கு வந்தாலும், சாம்ஸும் கிரேன் மனோகரின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பிரபுதேவாவின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் T.சிவா, காது கேளா மனைவியிடம் சத்தமாகப் பேசிப் பேசி, பிரபுவை ஒரு காட்சியில் தர்மசங்கடத்திற்கு ஆழ்த்துகிறார். படத்தில் நகைச்சுவைக்கான இடமும் தேவையும் விரவிக் கிடந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் ஒரு வேகம் இருப்பதால், ஜம்ப்பிங் காட்சிகளாகவே பெரும்பாலும் உள்ளன. லாஜிக் இல்லா மேஜிக்கென இயக்குநர் ஷக்தி சிதம்பரம் முடிவெடுத்தது காரணமாக இருக்கலாம்.