Shadow

டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’

காலங்காலமாகப் படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையைத் தந்த முதல் தென்னிந்திய சினிமாவான “சிலந்தி”, 2008ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் அதன் பின், எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது.

இந்தப் படத்தைத் திருப்பூரைச் சேர்ந்த சங்கர் பழனிச்சாமி ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளராக “மாலை முரசு” நாளிதழில் பணியாற்றிய ஆதிராஜன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார் (இவர் கன்னடத்தில் ‘ரணதந்த்ரா’, தமிழில் ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ படங்களை இயக்கியவர்). முன்னாவும் மோனிகாவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மற்றும் ரியாஸ் கான், நீலிமா ராணி, சந்துரு ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோனிகா பல படங்களில் நாயகியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் தேர்ச்சி பெற்று ‘இவன்’, ‘விசில்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்த பெளசியா பாத்திமா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ உட்பட பல வெற்றிப் படங்களுக்குப் பணியாற்றிய சதீஷ் குரோசோவா படத்தொகுப்பைக் கவனித்திருந்தார். நடனக் காட்சிகளை தீனா வடிவமைத்திருந்தார்.

முதல் டிஜிட்டல் பட அனுபவம் குறித்து இயக்குநர் ஆதிராஜன் நினைவுகூரும் போது, “இந்தப் படத்தை எடுக்கும் போது நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சோனி எச் டி மற்றும் பானாசோனிக் கேமராக்களில் தான் படம் பிடித்தோம். காட்சிகள் எச்டி டேப்பில் தான் பதிவு செய்யப்பட்டது. உச்சிவெயிலில் படப்பிடிப்பு நடத்தினால் ப்ளீச் ஆகிவிடும். அதனால் மதிய நேர படப்பிடிப்பைத் தவிர்த்தோம். டிஜிட்டல் கேமராவில் காட்சிகள் 25 பிரேமில் பதிவு செய்யப்படும். ஆனால் நம்மிடம் இருந்த அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் 24 பிரேமுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. 25 ப்ரேமை 24 க்கு மாற்றும்போது ‘நான் சிங்’ ஏற்படும். எல்லாத்தையும் கடந்து படத்தை முடித்தபோது பிக்சல்ஸ் அதிகமானது. இதனால் மும்பை பிரசாத் லேபிலிருந்து கலரிஸ்ட் ஒருவரை வரவழைத்து இரண்டு முறை கிரேடிங் செய்தோம். இப்படி பல சவால்களைக் கடந்துதான் சிலந்தி படத்தைத் திரைக்குக் கொண்டு வந்தோம். முழுக்க முழுக்க டிஜிட்டல் தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் சுமார் 100 தியேட்டர்களில் மட்டுமே க்யூப் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. என்னுடைய பத்திரிகை நண்பர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பு படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே போன்று கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவையும் சிறப்பாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது.

டிஜிட்டல் படத்தை உருவாக்க வேண்டும் என்று யோசித்ததுடன் என்னை உற்சாகப்படுத்தி இயக்குநராகவும் உருவாக்கிய நண்பர், தயாரிப்பாளர் சங்கருக்கும், இந்தப் படத்தில் என்னுடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்திய என் நண்பர், மக்கள் தொடர்பாளர் ஏ. ஜானுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.

இப்பட்த்தின் தயாரிப்பாளர் சங்கர், விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர். விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். அவர், “சுமார் 60 லட்சம் பட்ஜெட்டில் 21 நாட்களில் முடிக்கப்பட்ட சிலந்தி படம் தமிழகத்தில் 35 தியேட்டர்களில் ரிலீசாகி சுமார் 3.5 கோடி வரை வசூல் செய்தது. படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே பல விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க “ரிவர்ஸ் டெலிசினி” முறையில் டிஜிட்டல் படத்தை பிலிமுக்கு மாற்றி பிரசாத் லேப்பில் பிரிண்டுகள் போடப்பட்டு ஐந்தாவது வாரத்தில் பிலிமிலும் சுமார் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி வசூலைக் குவித்தது. ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் சிலந்தி படத்தின் உருவாக்கத்தையும் வெற்றியையும் வசூலையும் கவனித்துக் கொண்டே இருந்தனர். சிலந்தி படத்தின் வெற்றி டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை அனைவருக்கும் அதிகப்படுத்தியது. இந்தப் படம் இந்தி, தெலுங்கு, போஜ்புரி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகுதான் 5டி, ரெட் ஒன் என்று பல டிஜிட்டல் கேமராக்கள் பல்வேறு மாற்றங்களுடன் வெளிவந்து இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது.

எனது தயாரிப்பில் முதல் படத்தை வெற்றி படமாக்கிய இயக்குநர் ஆதிராஜனுக்கும், கதாநாயகன் முன்னா, கதாநாயகி மோனிகா மற்றும் இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.