Shadow

“அமெரிக்கால படிச்ச தம்பியா இது?” – சிங்கம்புலி | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி, “மண் சார்ந்த படைப்புகளுக்கு சரியான தேர்வாக முத்தையாவை 2டி தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி முத்தையா கூறும்போது நாமும் இப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று அவருடன் தொடர்பில் இருந்தேன். முத்தையா ஒருவரிடம் கதை கூறினால், அவர் அப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று அர்த்தம். ஒரு காட்சியை அவரிடம் கூறினால், அதற்கு பல காட்சிகளைக் கூறுவார். எல்லாவற்றையும் பற்றி அறிந்திருப்பார். நிறைய கதைகளை வைத்துள்ளார். எப்போதும் சோர்வாகவே மாட்டார். சட்டை அணிவதில்கூட நெறியைப் பின்பற்றக் கூடியவர்.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர் கார்த்தி. படப்பிடிப்பு முடிந்தால் உடற்பயிற்சி செய்வார். வேறு யாரைப் பற்றியும் பேச மாட்டார். அமெரிக்காவில் படித்து வந்தவர்போல அல்லாமல் மிகவும் இயல்பாக இருப்பார். நான் மும்பை சென்று வந்தாலே இரண்டு நாட்களுக்கு ஹிந்தி மொழியில் கலந்துதான் பேசுவேன்” என்றார்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “சூர்யா, கார்த்தி மற்றும் ராஜா சார் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு அந்த மாதிரி உறவுகள் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.

ஸ்டுடியோ 9 இன்றுவரை விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் இருக்கிறது. என்னால் வாய்ப்பு கிடைத்தவர்கள் வளர்ந்த பிறகு என்னைவிட்டுச் சென்று விட்டார்கள். ஆகையால், நானே தயாரித்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இப்போது எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறியது. கார்த்தி அண்ணன் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சியிலும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் கொடுத்த வாய்ப்பைப் போன்று தொடர்ந்து கார்த்தி அண்ணன் கொடுக்க வேண்டும்” என்றார்.