Search

“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடிகை இந்திரஜா, “இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்துதான் நான் 2 ஆவது மொட்டை அடித்தேன். என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி” என்றார்.

நடிகை சரண்யா, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவரையும் தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவது 2-டி நிறுவனம் மட்டும்தான். என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்கள்.

‘குட்டிப் புலி’ படத்தில் முத்தையாவுடன் பணியாற்றினேன். அதற்கு பிறகு அவரின் படங்களில் நான் பணியாற்றவில்லை. இந்தப் படத்திற்கு அழைத்தபோது, ‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் நான் கதை கேட்க மாட்டேன்’ என்று கூறிவிட்டேன். அவர் கூறியதைச் செய்தாலே காட்சிகள் நன்றாக வரும்.

ராஜ்கிரணுடன் நடிக்கும்போது குடும்ப உறவாகத் தோன்றும்படி பழகுவார். சூரியுடன் நகைச்சுவை நன்றாக எடுபடும் வகையில் அமைந்துள்ளது. ‘எல்லோருக்கும் அம்மாவாக தோன்றும்படி எப்படி நடிக்கிறீர்கள்?’ என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். நான் எப்படி நடிக்கிறேன் என்று எனக்கே தெரியாது, அது கடவுளும், தமிழ் சினிமா துறையும் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரம்” என்றார்.

நடிகர் சூரி, “சூர்யா அண்ணன் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள். கார்த்தி அண்ணனும் நன்றாக இருப்பார். உங்களுக்குக் கிடைக்கக் கூடிய வருமானத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால், பலருக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். கல்வி, வேலை என்று மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அண்ணன், தம்பி இருவரும்.

இந்த 2-டி நிறுவனத்தை ‘சவுக்கு’ போல ராஜா சார் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும் உதாரணமாக இருக்கும் ராஜ்கிரண் அப்பாவிற்கு நன்றி. இன்னும் 25 ஆண்டுகளானாலும், நீங்கள் வேட்டியைத் தூக்கிக் கட்டினால் அழகாகத்தான் இருக்கும்.

மறுநாள் படப்பிடிப்பிற்கு தேவையானவற்றை முதல் நாளே திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கிறார்கள் இந்த 2-டி நிறுவனத் தயாரிப்பு நிர்வாகத்தினர். சரண்யா அக்காவிற்கு வாழ்த்துகள். நீங்கள் எல்லோருக்கும் அம்மாவாக நடிக்கவில்லை. அம்மாவாகவே வாழ்கிறீர்கள். ஆகையால்தான் எல்லோருக்கும் அம்மாவாக தோன்றுகிறது.

இயக்குநர் முத்தையா மண் சார்ந்து அதோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார். அதனால்தான் தொடர்ந்து அது போன்ற படங்களை இயக்கி வெற்றிப் படமாகக் கொடுக்க முடிகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போதுகூட நகைச்சுவை செய்து விடுவார். முதல் படத்திலேயே சிறப்பாக நடனமும் ஆடியிருக்கிறார்.

நான் தூக்கி வளர்த்த பெண் இந்திரஜாதான் எனக்கு ஜோடி என்று கூறியதும், முதலில் தயங்கினேன். ஆனால், இந்திரஜாவே அந்தத் தயக்கத்தை உடைத்துவிட்டார்.

மதுரை விழாவில், ஆயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்து என்று பாரதியாரின் கூற்றைத்தான் நான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் நான்” என்றார்.