நடிகர் ஆமிர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் ஆமிர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
வயாகாம் 18 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே, ”ஆமிர்கான் மற்றும் லால் சிங் சத்தா உடனான எங்களது பதினான்கு ஆண்டுகால பயணம், ஒரு நல்ல இடத்தைத் தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படம் வெளியாவது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. இந்தப் படைப்பு இந்திய அளவில் உருவானது. இதனைச் சாத்தியப்படுத்தியது எளிதானதல்ல. ஆமிர்கான் என்ற ஒரு கலைஞரால் மட்டுமே, அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் மட்டுமே, இது சத்தியமாகியிருக்கிறது. இயக்குநர் அத்வைத் சந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர், பல்வேறு தடைகளைக் கடந்து லால் சிங் சத்தாவை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பை ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள்” என்றார்.
இயக்குநர் அத்வைத் சந்தன், ”ஃபாரஸ்ட் கம்ப் எனும் படைப்பு, லால் சிங் சத்தா என்ற பெயரில் உருமாற்றம் பெற்றிருப்பதும், அதனை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதும் ஆமிர்கான் எனக்கு அளித்த ஆசி. திரைக்கதை ஆசிரியர் அதுல் குல்கர்னியின் உழைப்பு எளிதானதல்ல. ஆமிர்கான், அஜித் ஆந்த்ரே, மோனோ சிங், நாக சைதன்யா போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தப் படைப்பு நிறைவு பெற்றிருக்காது. சென்னைக்கு வருகை தந்து இந்தப் படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தைப் பார்வையிடும் போது புதிய படம் போல், புது அனுபவத்தை அளித்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் படைப்பு என்பதால் இதற்கு ரசிகர்களிடத்தில் பெரும் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
நடிகர் நாக சைதன்யா, ”நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய கலையுலகப் பயணத்தில் முக்கியமான திரைப்படம். ஒரு நடிகராக இந்தத் திரைப்படத்தில் நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் அத்வைத் சந்தன், தயாரிப்பாளரும் நாயகனுமான ஆமிர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11ம் தேதி அன்று வழங்குகிறோம்” என்றார்.
நாயகன் ஆமிர்கான், ”லால் சிங் சத்தா படத்தைத் தமிழகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் மறுப்பு தெரிவிக்காமல் வெளியிடவிருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபாரஸ்ட் கம்ப் எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதற்கு, இந்தியக் கலாசாரத்தை அடியொட்டி திரைக்கதை அமைத்திருந்தார் அதுல் குல்கர்னி. படத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதனைப் பின்பற்ற வேண்டும் என்பதனை இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் நேர்மறையாக உணர்த்திருக்கிறார்கள். இந்தப் படைப்பினை உருவாக்கிய அனைவருக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு இந்த படைப்பு கவரும் என நினைக்கிறேன்” என்றார்.