Search

நண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்

Frieds-dream-made-as-wish-by-SK

பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது கனா திரைப்படம். தனது நண்பன் அருண்ராஜா காமராஜாவிற்காகப் படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

“அருண்ராஜா எழுதிய எல்லாப் பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன். அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதிட்டு வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்தப் படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன்.

இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா, நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார். விவசாயத்தைப் பற்றிப் பேசும் ஒரு கதாபாத்திரத்திற்கு எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்தபின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அந்தச் செலவைச் செய்தோம். இந்தப் படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோ தான் செலவு செய்வேன்.

படம் தயாரிக்கப் போறேன்னு முடிவெடுத்தவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார். ஆராதனாவைப் பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிறப் பணத்துக்குச் சொத்து வாங்கிச் சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தைத் தயாரிக்கலாம்ன்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தைத் தயாரிக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

“டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு கிரிக்கெட், விவசாயம் இரண்டுமே மிகவும் நெருக்கமானது. எனக்கும் கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது. அது நடக்கவில்லை. சினிமாவில் முயற்சி செய்தேன். ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கணும் என்று படத்தில் வரும் வசனம் எனக்கும் பொருந்தும். இந்த படத்துக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இதுவரை படம் வந்ததில்லை” என்று தன் நன்றியைச் சிவகார்த்திகேயனுக்குத் தெரிவித்துக் கொண்டார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா.

200 ரன்கள் குவித்த முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் விளையாட்டு வீரரான ஸ்மிரிதி மந்தனாவைக் கனா இசை வெளியீட்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். “பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றிய படமெடுக்க இது சரியான தருணம். ஆண்கள் கிரிக்கெட் போலவே இதுவும் பரவலாகக் கவனிக்கப்படவேண்டும். பெண்கள் கிரிக்கெட் பற்றிப் படம் எடுத்ததற்காகச் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் அருண்ராஜா காமராஜாவுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஸ்மிரிதி மந்தனா.

Cricketer-Smriti-Mandhana