Shadow

களரி விமர்சனம்

Kalari-movie-review

களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. ‘போர்க்களம்’ என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது.

மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை.

கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத் கேரளர் ஆவார்.

வக்கீல் பாஸ்கியாக வருகிறார் பிளாக் பாண்டி. நகைச்சுவை என்ற பெயரில் ரணப்படுத்துகிறார். குடிக்காரராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கடி வில்லனைப் போல் கண்களை உருட்டிப் பார்க்கிறார். வீட்டினர் மீதான அவரது வெறுப்பிற்குக் காரணத்தை வசனமாக அவர் சொன்னாலும், காட்சி ரீதியாக அதற்கான ஒரே ஒரு ஷாட் கூட இல்லாததால் அது எடுபடவில்லை. மூர்த்தியாக வரும் கிருஷ்ண தேவாவும், சித்திக் பாயாக வரும் ஜெயப்ரகாஷும் கச்சிதமான தேர்வு.

ஒரு நோக்கின்றிப் பயணிக்கும் படத்தில், இடைவேளையில் தான் கதை தொடங்குகிறது. முருகேஷாகக் கிருஷ்ணாவும், தேன்மொழியாக சம்யுக்தாவும் நடித்துள்ளனர். கதை என்ற ஒன்று படத்தில் இருந்தாலும், அதைத் திரைக்கதையில் சுவாரசியமாகச் சொல்லத் தவறியுள்ளார் இயக்குநர் கிரண் சந்த். வித்யாவுடனான அவரது காதற்காட்சியெல்லாம் சுத்தமாக ஒட்டவேயில்லை. தைரியமான பெண்ணாகக் காட்டப்படும் தேன்மொழி தற்கொலை செய்து கொள்வதாகக் காட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தன் தங்கையின் மரணத்திலுள்ள மர்மத்தினைக் கிருஷ்ணா, தன் புத்திசாலித்தனத்தினால் கண்டுபிடிக்கவில்லை. ஒருத்தர் வந்து காதில் உண்மையைக் கிசுகிசுக்கவும், தன் குறையான அகோராஃபோபியாவை (Agoraphobia) மீறிப் பழிவாங்குகிறார். பழிவாங்குதல், கொலை என முடிவான பிறகு முருகேஷோ, இயக்குநர் கிரண் சந்தோ இன்னும் கொஞ்சம் புத்தியைத் தீட்டியிருக்கலாம். நாயகனின் திட்டம் சுவாரசியமாக இருந்தாலும், தன்னையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒப்பான முயற்சியில் இறங்குவது ஹீரோவிற்கு அழகா என்ற குழப்பத்துடன் படம் முடிகிறது.