Shadow

பாடலாசிரியர் சினேகனின் வருத்தமும், ராஜசேகர் கற்பூர பாண்டியன் விளக்கமும் | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பாடலாசிரியர் சினேகன், “இந்த ‘விருமன்’ படத்தின் மதுரை விழாவிற்கு அழைக்காதது குறித்து ஒரு மேடையில் வருத்தம் தெரிவித்திருந்தேன். அதை மிகப் பெரிய வைரலாக்கி விட்டார்கள். அதற்காக 2டி நிறுவனத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்து பெரிய பட்ஜெட் படங்களில் 2 படங்களில்தான் எங்களைப் போன்ற பாடலாசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அப்படி 2 படங்களில் ஒன்றாகத்தான் இப்படத்தை நினைத்திருந்தேன். அந்த அங்கீகாரம் கிடைக்காமல் போன உரிமையில்தான் பேசினேன். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அதைத் தெளிவுபடுத்தத்தான் இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன்.

நான் கடந்த 22 வருடங்களில் 2500 பாடல்களை எழுதியிருக்கிறேன். ஷோபி, சாண்டி மாஸ்டர், சிங்கம் புலி, ராஜ்கிரண் அனைவரும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்” என்றார்.

தயாரிப்பாளரான 2டி ராஜசேகர் கற்பூர பாண்டியன், “கார்த்திக்குத்தான் முதலில் நன்றி கூற வேண்டும். ‘கொம்பன்’ போன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ‘கொம்பன்–2’ எடுக்கலாம் என்று முத்தையா கூறினார்.

ஆனால், புதிதாக மண் சார்ந்த படம் வேண்டும் என்று நினைத்துதான் இந்த ‘விருமன்’ கதையைத் தேர்ந்தெடுத்தோம். உறவுகளை அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியை மறந்துவிடாதபடி ஒரு படம் எடுக்க நினைத்தோம். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும்படியான ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். இப்போது எனது தங்கை அப்படி இருக்கிறார்.

அதிதியை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்குத்தான் பெருமை. எங்களை நம்பி அதிதியை அனுப்பி வைத்த ஷங்கர் சாரும், ஈஸ்வரி மேடத்திற்கும் நன்றி. ராஜ்கிரண் சாரைக் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலேயே நடிக்க அழைத்தோம். ஆனால், அப்போது அவரிடம் தேதிகள் இல்லை. இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி.

பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை திரையிலும், திரைக்கு வெளியிலும் நடந்து கொள்ளும் முத்தையாவிற்கு இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தற்காகப் பெருமைப்படுகிறோம்.

மதுரையில் பிரமாண்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நம் வீட்டில் திருமணம் நடக்கும்போது பெரியப்பா, சித்தப்பா யாரையாவது ஒருவரை மறந்துவிடுவது போலத்தான் பாடலாசிரியர் சினேகனை மறந்துவிட்டோம். அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.