Shadow

மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் ராஜ்கிரண், “இந்தப் படம் மூலமாக 2-டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படமாக இந்த ‘விருமன்’ படத்திலும் கொடுத்ததற்கு நன்றி.

2டி நிறுவனம் படத்தயாரிப்பினை ஒரு கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து அனைவருக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். இப்படத்தை வெறும் படமாக வியாபார நோக்கில் எடுக்காமல், நல்ல கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்போடு தம்பி முத்தையா எடுத்திருக்கிறார்” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளரான சக்திவேலன் பேசும்போது, “இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோகத்தை சக்தி பிலிம் பேக்டரி செய்கிறது. கார்த்தியின் ரசிகனாகத்தான் இந்தப் படத்தை நான் விநியோகம் செய்கிறேன்.

‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, நான்காவதாக இந்த ‘விருமனை’யும் நான்தான் விநியோகம் செய்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ராஜ்கிரண் போன்ற கலைஞர்களின் படங்களை வண்டிக் கட்டிக் கொண்டு வந்து பார்ப்பார்கள். சம காலத்தில் கிராமங்களை இயல்பாக பதிவு செய்ய பாரதிராஜாவிற்குப் பிறகு யாரும் கிடையாது. அதை முத்தையா நிறைவேற்றி இருக்கிறார்.

எப்போதும் மண் சார்ந்த படத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். அதிலும் கார்த்தி சார் படமென்றால் மக்கள் கொண்டாடுவார்கள். நகரத்துப் பெண்களைவிட கிராமத்து பெண்கள்தான் அருமையாக காதலிப்பார்கள். அதை நிறம் மாறாமல் பதிவு செய்தது முத்தையாதான்.

உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேடித் தேடித் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்பதை மதுரை மாதிரியான கிராமங்களில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

கிராமப் படங்களை ஆதரித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேன்மையடையும். அதற்கான மிகப் பெரிய அடித்தளமாக இப்படம் இருக்கப் போகிறது. என் பெயருக்குப் பின்னால் எனது அப்பா பெயர் இனிஷியலாக இருப்பது போல எனது வியாபாரத்திற்கு 2டி நிறுவனம் இருக்கும். அவர்களின் குடும்பத்திற்கு நன்றி என்ற வெறும் வார்த்தையால் கூற முடியாது” என்றார்.

நடிகை அதிதி, “என் கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. என் வீட்டைவிட்டு நான் எங்கும் சென்றதில்லை. அந்தக் குறை தெரியாமல் பார்த்து கொண்ட 2-டி நிறுவனத்திற்கும், படக் குழுவிற்கும் நன்றி.

முத்தையா எல்லாவற்றையும் ஊக்கப்படுத்திக் கற்றுக் கொடுத்தார். இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. கார்த்தி சார் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். சூரி சாருடன் நடிக்கும் காட்சிகளில் ஏதாவது நகைச்சுவை சொல்லிக் கொண்டிருப்பேன். ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் சாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. கார்த்தி சார் போலவே நானும் முதல் படமாக மண் சார்ந்த படத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.