2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.
இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குநர் முத்தையா, “இப்போது இருக்கும் காலகட்டத்தில் இரு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை. பிறகு குழந்தையே வேண்டாம். நாம் இருவர் நாமே இருவர் என்ற நிலையும் வரலாம்.
இப்படத்தின் கதை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன்.
கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது, ‘எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள்’ என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வெள்ளையடித்ததற்குதான்.
இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டில் பாடலைப் பாடிக் கொடுத்ததில் மிகுந்த பெருமை. இக்கால இயக்குநருக்கு அப்படி அமைவது அரிது. அனைத்து ஒட்டுனர்களும் இரவில் அமைதியாக வண்டி இயக்க அவர்தான் காரணமாக இருக்கிறார்.
செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னை படத்தில் வட சென்னை பகுதியைத் தத்ரூபமாக செட்டாக அமைத்துத் தந்திருந்தார் ஜாக்கி. ஆகையால்தான், இந்தப் படத்திற்கு அவரை அழைத்தோம்.
பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனமோ இடம் பெறாது” என்றார்.